Published : 04 Jul 2024 04:14 PM
Last Updated : 04 Jul 2024 04:14 PM

சென்னை மாநகராட்சி சுகாதார நிலையங்களில் காயங்களுக்கு மருந்திட மறுக்கும் பணியாளர்கள்!

கோப்புப் படம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 140 நலவாழ்வு மையங்கள், 16 சமூக நல மையங்கள், 3 மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும தொற்றுநோய் மருத்துவமனைகள் என 300 சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன.

சென்னை மாநகராட்சியில் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 140 நலவாழ்வு மையங்கள், 16 சமூக நல மையங்கள், 3 மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும தொற்றுநோய் மருத்துவமனைகள் என 300 சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் புறநோயாளிகள் பிரிவில் ஆண்டுக்கு சுமார் 1 கோடி பேருக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகளாக 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநகராட்சி சுகாதார நிலையங்களில் பயன்பெறுவோரின் எண்ணிக்கையை மேலும் 10 சதவீதம் உயர்த்தி,அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கையை பெருமளவு குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் ஆர்.பிரியா கடந்த 2022-ம் ஆண்டே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், டவுட்டன் ராட்லர் தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு காலில் காயத்துடன் சென்ற நோயாளியை காத்திருக்க வைத்து, காயத்தின் மீது பூசுவதற்கான மருந்தை கையில் கொடுத்து பூசிக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மருந்திட கோரினால், “அதற்கான வசதி மற்றும் தூய்மைப்படுத்துவதற்கான பொருட்கள், கட்டு கட்டுவதற்கான காட்டன் இல்லை. அரசு பொது மருத்துவமனைக்கு செல்லுங்கள்” என்று சுகாதார பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நலவாழ்வு மையங்களில் முதலுதவிக்கு முக்கியத்துவம் அளிக்குமாறும், அதற்கு தேவையான பொருட்களை இருப்பில் வைக்கவும் மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தி இருந்தார்.

இதனிடையே, தண்டையார்பேட்டை மண்டலம், 37-வது வார்டு, வியாசர்பாடி, மகாகவி பாரதி நகரில் இயங்கும் மாநகராட்சி நலவாழ்வு மையத்தில், கை விரல் காயத்துடன் சென்ற நோயாளிக்கும் முதலுதவி எதுவும் செய்யாமல் பூச்சு மருந்து மற்றும் மாத்திரையை கொடுத்து அனுப்பியதாக அந்த நோயாளி புகார் தெரிவித்துள்ளார். இந்த நிலையத்தில் பல நாட்கள் காலை 8 மணிக்கு மருத்துவர் வருவதில்லை. மருத்துவர் இருந்தாலும் செவிலியர்தான் நோயாளிகளை பார்த்து மருந்து எழுதி கொடுக்கிறார். பல நேரங்களில் மருத்துவர்களே இருப்பதில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாநகராட்சி சார்பில் பாலிகிளினிக் என்ற மாலை நேர மருத்துவ சேவை, 40 ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற சிறப்பு மருத்துவர்களை கொண்டு குழந்தை மருத்துவம், தோல், மகளிர் மருத்துவம், மனநலம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. எந்த தேதியில், எந்த இடத்தில், எந்த சிறப்பு மருத்துவர் வருகிறார் என்பது குறித்த விவரங்களை மாநகராட்சி நிர்வாகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.

அதை பார்த்து, தோல் நோய் சிறப்பு மருந்துவர் வருவதாக குறிப்பிட்டிருந்த தேதியில் வியாசர்பாடி சத்யமூர்த்தி நகரில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றால், அப்படி ஒரு சிறப்பு மருத்துவர் இங்கு வருவதே இல்லை என்றனர். இதனால் மாநகராட்சி நிர்வாகம் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடும், மருத்துவர்கள் வருகை தொடர்பான விவரங்கள் மீது நம்பகத்தன்மை இல்லை என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “இப்புகார்கள் குறித்து நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x