Published : 04 Jul 2024 01:45 PM
Last Updated : 04 Jul 2024 01:45 PM
சென்னை: மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம் என்று, உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞர் அணிச் செயலாளராக கடந்த 2019, ஜூலை 4ம் தேதி நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின், 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திமுக இளைஞர் அணிச் செயலாளராக இன்று ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.
உறுப்பினர் சேர்க்கை, கிளை-வார்டுகளுக்கும் நிர்வாகிகளை நியமித்தது, கைவிடப்பட்ட நீர்நிலைகளைச் சீரமைத்தது, கொரோனா கால நலத்திட்ட உதவிகள், நீட் தேர்வுக்கு எதிரான தொடர் போராட்டங்கள், திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள், தமிழ்நாடு முழுவதும் நேர்காணல் நடத்தி, மாவட்ட அளவிலான நிர்வாகிகளைத் தேர்வு செய்தது,
இரண்டாவது மாநில மாநாடு, இல்லந்தோறும் இளைஞர் அணி முன்னெடுப்பு, சமூக வலைத்தளத்தில் இயங்கும் தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பது, முரசொலி பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம், தொகுதிதோறும் கலைஞர் நூலகம், தேர்தல் பிரச்சாரங்கள்... மனதுக்கு நெருக்கமான பல பணிகளை செய்துள்ளோம் என்ற வகையில் மகிழ்வாக உள்ளது.
இந்த வாய்ப்பை வழங்கிய முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், இளைஞர் அணியினரைக் களத்தில் உற்சாகப்படுத்தி ஒருங்கிணைக்கும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தினுடைய அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி.
கழகப் பணிகள் அனைத்திலும் எனக்கு உறுதுணையாக நிற்கும் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு என் அன்பும் வாழ்த்தும்! மக்கள் பணி, கழகப் பணியை தொய்வின்றி தொடர்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT