Published : 04 Jul 2024 01:39 PM
Last Updated : 04 Jul 2024 01:39 PM

“தவெக தலைவர் விஜய் இன்னொரு கமல் ஆகிவிட்டார்” - அர்ஜூன் சம்பத் விமர்சனம்

கும்பகோணம்: திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்னொரு கமல்ஹாசனாகி விட்டதாக இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் விமர்சித்துள்ளார்.

சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் வரும் 21-ம் தேதி சூரசம்ஹார மாநாடு, கருத்தரங்கம், காவடி, கிரிவலம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இந்து மக்கள் கட்சி நடத்துகிறது. அதற்கான பத்திரிக்கையை இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சுவாமிமலை சுவாமிநாத கோயிலின் உபகோயிலான அய்யனார் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை பாபநாசம் எம்எல்ஏ-வான ஜவாஹிருல்லாவின் பெயரைப் பயன்படுத்தி ஆக்கிரமித்து கட்டுமான பணிகளை செய்து வருகிறார்கள். இது தொடர்பாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த இடத்தை மீட்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும்.

பாபநாசம் வட்டம், கோயில் தேவராயன்பேட்டையில் அண்மையில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இதனடிப்படையில் அந்தப் பகுதி முழுவதும் அகழ்வாராய்ச்சி செய்வதுடன் அந்தச் சிலைகளைக் கோயிலிலே பாதுகாப்பாக வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில்களில் உள்ள கோசாலை முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. அங்குள்ள வயது முதிர்ந்த மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3 குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சி வழக்கறிஞர்கள் போராட்டத்தை தூண்டி விடுவது, நீதிமன்றப் பணிகளைப் புறக்கணிப்பது, தவறான கருத்துக்களைத் தொடர்ந்து பரப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சட்ட விரோதப் போராட்டங்களைத் தடை செய்ய வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்டார். இப்படித்தான் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ‘லஞ்ச ஊழலை ஒழிப்பேன்’ எனக் கூறி வந்தார். ஆனால் தற்போது திமுகவுக்குப் பிரச்சாரம் செய்கிறார். அதுபோல நடிகர் விஜய் வீராவேசமாக தமிழக வெற்றிக் கழகமாக புறப்பட்டார். ஆனால் அவரும் இன்னொரு கமல்ஹாசனாகி விட்டார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அடுத்ததாகத் திரைப்படம் வெளி வர வேண்டி உள்ளது. அந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு திமுகவினர் சில நிர்ப்பந்தம் அளித்ததால், நீட் தேர்வு தொடர்பாக திமுகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் விஜய், மத்திய அரசை, ஒன்றிய அரசு எனப் பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யாவைப் போல விஜயும் விரைவில் மாறிவிடுவார்” என அர்ஜுன் சம்பத் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x