Published : 06 May 2018 07:43 AM
Last Updated : 06 May 2018 07:43 AM
தமிழ்நாட்டில் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 847 ஆக உயர்ந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்று போக்குவரத்து வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, அரசு போக்குவரத்துத் துறை பதிவேடுகளின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 847 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரே ஆண்டில் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 10 முதல் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
இரு சக்கர வாகனங்கள்
தமிழகத்தில் கடந்த மார்ச் மாத நிலவரப்படி, இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே 15 லட்சத்து 86 ஆயிரத்து 210 ஆகும். இது மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் சுமார் 82 சதவீதமாகும். தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 1 கோடியே 99 லட்சத்து 87 ஆயிரத்து 302 இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப் பட்டிருந்தன.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, “தமிழகத்தில் தினந்தோறும் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. தினந்தோறும் சராசரியாக 3,666 பேர் லைசென்ஸ் பெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புதிய வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் அதிகரித்துள்ளது. வாகன எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருப்பதுபோல் புதிய கட்டுப்பாடுகள் அவசியமாகும். குறிப்பாக, வாகன நிறுத்தம் இல்லாதவர்களின் வாகனங்களைப் பதிவு செய்யக் கூடாது போன்ற புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தால்தான் வாகனங்களின் பெருக்கத்தைக் குறைக்க முடியும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் போன்ற புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். சாலைகளை விரிவுபடுத்துதல், மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதுதவிர ஒவ்வொரு நகரத்திலும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வாகனங்களைப் பதிவு செய்ய புதிய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்” என்றனர்.
பொது போக்குவரத்து
தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர் பாக சென்னை ஐஐடி உதவி பேராசிரியர் கீதகிருஷ்ணன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தேவைக்கு ஏற்ப பேருந்து, ரயில் போக்குவரத்து வசதியின்மை, போக்குவரத்து நெரிசல் ஆகியவைதான் வாகனங்கள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பொதுபோக்குவரத்து வசதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும், தனியார் வாகனங்கள் வாங்கினால் புதிய வரிகளும் விதிக்கப்படுகின்றன.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அறிவுசார்ந்த புதிய முறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. விரைவாகச் செல்ல தனி பாதை ஒதுக்கீடு, பேருந்துகளுக்கு தனி சாலை அமைத்தல், போக்குவரத்து நெரிசல் குறித்து தகவல் தெரிவிக்க தனி கால்சென்டர் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற திட்டங்களை தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும். பொதுபோக்குவரத்து வசதியை மேம்படுத்த அரசு அதிக முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் மக்கள் பொது போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து விழிப்புணர்வு அமைப்பு செயலாளர் வி.ராமா ராவ் கூறும்போது, “பேருந்து, ரயில் போன்ற பொதுபோக்குவரத்து வசதி பல்வேறு இடங்களில் போதிய அளவில் இல்லாமல் இருக்கின்றன. அதனால் வேறு வழியின்றி மக்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இது வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. சென்னையில் தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவையிலும் கட்டணம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அதிக அளவில் பயணம் செய்வதில்லை. சிறப்பான பொது போக்குவரத்து வசதி கிடைத்தால், மக்கள் தனியாக வாகனங்கள் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மக்கள் அதிக அளவில் பயன்பெறும் வகையிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பொது போக்குவரத்து வசதியை அதிகரிக்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT