Published : 04 Jul 2024 05:55 AM
Last Updated : 04 Jul 2024 05:55 AM

ராமேசுவரம் கஃபே குண்டுவெடிப்பு சர்ச்சை பேச்சு வழக்கை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் ஷோபா நீதிமன்றத்தில் மனு

ஷோபா கரந்தலாஜே

மதுரை: பெங்களூரு ராமேசுவரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில், தமிழர்களைத் தொடர்புப்படுத்தி பேசியது தொடர்பாக மதுரை சைபர்க்ரைம் போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி, மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே, மக்களவைத் தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் பாஜகசார்பில் போட்டியிட்டார். அவர் பேசும்போது, பெங்களூரு ராமேசுவரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தைக் குறிப்பிட்டு, ‘தமிழகத்தில் பயிற்சி பெற்று வருவோர், இங்கு வெடிகுண்டுகள் வைக்கின்றனர்’ என்று தெரிவித்தார்.

இதற்கு தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, தனது பேச்சுக்கு ஷோபா கரந்தலாஜே ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துப் பதிவு வெளியிட்டார்.

இதனிடையே, தமிழர்கள், கன்னடர்கள் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசிய ஷோபா கரந்தலாஜே மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை கடச்சனேந்தலைச் சேர்ந்த தியாகராஜன், மதுரை சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் ஷோபா கரந்தலாஜே மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஷோபா கரந்தலாஜே, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், பெங்களூரு ராமேசுவரம்கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புப்படுத்தி பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளேன். இந்த பேச்சுதொடர்பாக பெங்களூரு சிக்பேட்டை காவல் நிலையத்திலும் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்குக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடையாணை பிறப்பித்துள்ளது.

அதே பேச்சுக்கு அரசியல் உள்நோக்கத்துடன் மதுரையிலும் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமேசுவரம் கஃபேவழக்கில் கைதான நபர் சென்னையில் தங்கியிருந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ சென்னையில் சோதனை நடத்தியது. தமிழர்களை நான் அவதூறாகப் பேசவில்லை.

எனவே, மதுரை சைபர் க்ரைம் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதுவரை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த மனுவிரைவில் விசாரணைக்கு வரஉள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x