Published : 03 Jul 2024 09:10 PM
Last Updated : 03 Jul 2024 09:10 PM
புதுச்சேரி: 3 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டமே நடத்தவில்லை; கூட்டணி தர்மப்படி நடக்கவில்லை என முதல்வர் ரங்கசாமி மீது தேசிய தலைவர் நட்டாவிடம் புதுச்சேரி பாஜக, ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் புகார் தெரிவித்தனர்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கூட்டணியின் தலைவராக முதல்வர் ரங்கசாமி உள்ளார். இதில் அமைச்சர் பதவி இல்லாத பாஜக எம்எல்ஏக்கள் வாரியத் தலைவர்கள் பதவி கோரினர். பின்னர் தங்களுக்கு அமைச்சர் பதவியும் கேட்டு வந்தனர். ஆனால் கூட்டணியின் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி இக்கோரிக்கை பற்றி மவுனமாக இருந்து வந்தார்.
மூன்றாண்டுகள் ஆட்சி நிறைவடைந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜக புதுச்சேரியில் தோல்வியடைந்தது. இத்தோல்விக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவரான ரங்கசாமி மீதும் அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணனிடம் பாஜக எம்எல்ஏக்கள் தெரிவித்தனர். இவர்களுடன் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்களும் சென்றிருந்தனர்.
பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதியாலும் எம்எல்ஏக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. பாஜக கட்சியில் ஒரு பிரிவினர் செல்வகணபதியை மாற்றக் கோரியுள்ளனர். போராட்டங்களும் நடத்துகின்றனர். பாஜக கட்சிக்குள்ளும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்ட், வெங்கடேசன், ஆதரவு சுயேட்சைகள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் டெல்லிக்கு சென்றுள்ளனர்.
அதேநேரத்தில் நியமன எம்எல்ஏக்கள் அசோக்பாபு, ராமலிங்கம் ஆகியோர் டெல்லி செல்வதை தவிர்த்து விட்டனர். இந்நிலையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலை முதலில் சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து பாஜக தேசியத்தலைவர் நட்டாவை சந்தித்து பேசினர். இதுபற்றி பாஜக எம்எல்ஏக்கள் தரப்பில் கேட்டதற்கு, “பாஜக தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வாலை சந்தித்து பேசினோம். தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவரான முதல்வர் ரங்கசாமி, எம்எல்ஏக்கள் கூட்டமே 3 ஆண்டுகளாக நடத்தவில்லை.
பட்ஜெட் தாக்கலாகும் முன்பு கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை அழைத்து இம்முறையும் பேசவில்லை. வளர்ச்சி திட்டங்களை தெரிவித்தாலும் புறக்கணிக்கிறார்கள். முதல்வர், அமைச்சர்கள் தரப்பில் எழும் ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன. வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தந்தால்தான் நல்லது என தெரிவித்தோம். இதுதொடர்பாக கலந்துபேசி தகவல் தெரிவிப்பதாகவும், ஏற்கெனவே ஐபி ரிப்போர்ட் வந்துள்ளதாகவும் நட்டா தெரிவித்தார்,” என்று குறிப்பிட்டனர். இச்சூழலில் மாநிலத் தலைவர் செல்வகணபதி டெல்லி சென்றுள்ளதால் அவர்கள் அனைவரும் சந்தித்து உரையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT