Published : 03 Jul 2024 06:06 PM
Last Updated : 03 Jul 2024 06:06 PM

“ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தையே ஆர்.எஸ்.பாரதி அவமதித்துவிட்டார்” - அண்ணாமலை கண்டனம்

சென்னை: தமிழகத்தில் இன்று நாய் கூட பிஏ பட்டம் வாங்குகிறது என்று பேசியதன் மூலம், ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தையே ஆர்.எஸ்.பாரதி அவமானப்படுத்திவிட்டார் என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எப்போதெல்லாம், திமுக ஆட்சிக்கு பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பு வருகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலய வாசலிலேயே இருக்கும் ஆர்.எஸ்.பாரதியை ஏவி விடுவார்கள் போல. கள்ளக்குறிச்சியில் திமுக ஆதரவோடு நடந்த கள்ளச் சாராய விற்பனையில் 65 உயிர்கள் பலியானதை மடைமாற்ற ஆர்.எஸ்.பாரதியைக் களமிறக்கியிருக்கிறார்கள்.

முன்பு ஒருமுறை, தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்களுக்கு நீதிமன்றப் பதவிகள் கிடைத்தது திமுக போட்ட பிச்சை என்று பேசினார். இன்று, தமிழகத்தில் மருத்துவர்கள் உருவானது திமுக போட்ட பிச்சை என்று பேசியுள்ளார். அதோடு, தமிழகத்தில் இன்று நாய் கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது என்று ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தையே அவமானப்படுத்திப் பேசியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி.

தமிழகத்தில் 1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை வெறும் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளை மட்டுமே அமைத்துள்ளது என்பதை மறந்த ஆர்.எஸ்.பாரதி, தமிழகத்தில் மருத்துவர்களை உருவாக்கியதே திமுகதான் என்று போலிப் பெருமை பேசிக் கொள்கிறார்.

திமுக முதல் குடும்பத்தினர் மீதுள்ள வழக்குகளுக்கு வாதாட வேண்டுமானால், டெல்லி, மும்பையிலிருந்து பல மூத்த வழக்கறிஞர்களையும், தமிழக அரசு சார்பான வழக்குகளுக்கு, தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர்களையும் தேர்ந்தெடுக்கும் கோபாலபுர குடும்பம், ஆர்.எஸ்.பாரதியை வாதாட அனுப்புவது, கதைக்கு உதவாத வழக்குகளுக்காகத்தான்.

தங்கள் பெற்றோரின் கடின உழைப்பாலும், தங்கள் கடும் முயற்சியாலும் படித்து முன்னேறும் மாணவச் செல்வங்களை அவமானப்படுத்தி, அவர்கள் வளர்ச்சிக்கு திமுகதான் காரணம் என்று கூறிக் கொள்ளும் ஆர்.எஸ்.பாரதி போன்றவர்களைத்தான் திமுக உண்மையில் உருவாக்கியிருக்கிறது.

தமிழக மக்கள் அனைவரையும், பிச்சைக்காரர்கள் என்ற ரீதியில் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கும் திமுகவின் ஆணவப் போக்கும், ஆர்.எஸ்.பாரதியின் வாய்த்துடுக்கும் கடும் கண்டனத்துக்குரியது. தமிழக மக்கள் அனைவரும் திமுகவினரை போன்றவர்கள் அல்ல. தமிழக மக்கள் தன்மானம் மிக்கவர்கள்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “நான் ஒரு வக்கீல். (மாணவரணி செயலாளர்) எழிலரசன் பி.இ., பி.எல்., இவையெல்லாம் எங்களுக்கு குலப் பெருமையால், கோத்திரப் பெருமையால் வந்தததா? இந்த இயக்கம் போட்ட பிச்சை என்பதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். திராவிட இயக்கம் இல்லையென்றால், கம்யூனல் அரசாணை இல்லை என்று சொன்னால், இத்தனை பேர் டாக்டர் பட்டம் பெற்றிருக்க முடியாது.

நான் பட்டம் பெறும் காலத்தில் ஒருவர் பி.ஏ. பட்டம் பெற்றால், உடனடியாக ஒரு பெயின்ட்ரை அழைத்து பி.ஏ. என்று போர்டு எழுதி மாட்டுவார்கள். காரணம் என்னவென்றால், அந்த ஊரிலேயே ஒரே ஒரு பி.ஏ. தான் இருக்கும். ஆனால், இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது நம்ம ஊரில். ஆனால், யாராவது போர்டு மாட்டுகிறார்களா? எனவே, இந்த வளர்ச்சிக்கு யார் காரணம் என்பதை மக்களை எண்ணிப் பார்க்க வேண்டும். அதை அழிப்பதற்காகத்தான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது” என்று பேசியிருந்தார்.

இந்தப் பேச்சு சர்ச்சையான நிலையில், “ஒரு காலத்தில், ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே கிடைத்த கல்வி, அனைவருக்கும் கிடைக்க காரணம் திராவிட இயக்கம்தான் என்பதே தனது பேச்சின் நோக்கம். மேலும், நாய்கூட பி.ஏ. பட்டம் பெறுகிறது என்பது உள்நோக்கத்துடன் சொல்லப்பட்ட கருத்து அல்ல” என்று ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x