Published : 03 Jul 2024 04:33 PM
Last Updated : 03 Jul 2024 04:33 PM
சென்னை: குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் செய்வதற்காக, தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளதாக, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 14.20 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன. குஜராத், கர்நாடகா உட்பட சில மாநிலங்களில் வீடுகளுக்கு குழாய் வழித் தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது. இது எல்பிஜி சமையல் எரிவாயு உடன் ஒப்பிடும் போது செலவு 20 சதவீதம் குறைவாக இருப்பதுடன், சுற்றுச்சூழலையும் பாதிப்பதில்லை.
தமிழகத்தில் குழாய் வழித் தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் எல்என்ஜி எனப்படும் திரவ நிலை இயற்கை எரிவாயு முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வெளிநாடுகளில் இருந்து கப்பலில் எரிவாயு கொண்டு வரப்படுகிறது. இந்த எரிவாயு, வாகனங்களுக்கு சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவாகவும், வீடுகளுக்கு பிஎன்ஜி எனப்படும் குழாய் வழித் தடம் மூலமாகவும் விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் வரும் 2030-க்குள் 2.30 கோடி வீடுகளுக்கும், 2,785 சிஎன்ஜி மையங்கள் மூலமாக வாகனங்களுக்கும் இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட 7 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. சென்னையில் டோரண்ட் நிறுவனம் அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 500 வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்து வருகிறது.
மேலும் 6 ஆயிரம் வீடுகள் குழாய் எரிவாயு இணைப்பு பெற பதிவு செய்துள்ளன. தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் வீடுகள் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு பெற எரிவாயு விநியோக நிறுவனங்களிடம் பதிவு செய்துள்ளன. இவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு பல்வேறு கட்டண சலுகைகளையும் வழங்கி வருவதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT