Published : 03 Jul 2024 04:26 PM
Last Updated : 03 Jul 2024 04:26 PM
செபுதுச்சேரி: டெல்லியில் முகாமிட்டுள்ள புதுச்சேரி பாஜக எம்எல்ஏ-க்கள் பாஜக முக்கியத் தலைவர்களை இன்று (புதன்கிழமை) சந்திக்கின்றனர். அப்போது முதல்வர் ரங்கசாமி மீது குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து அவரது அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தர வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முன்னதாக சட்டப் பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களையும், பாஜக 6 இடங்களையும் வென்றது. அதையடுத்து மூன்று நியமன எம்எல்ஏ-க்களை பாஜக நியமித்தது. 3 சுயேச்சைகளும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதற்காக அவர்களுக்கு பல உத்தரவாதங்களும் தரப்பட்டன.
இந்த நிலையில் அமைச்சர் பதவி இல்லாத பாஜக எம்எல்ஏ-க்கள் தங்களுக்கு வாரியத் தலைவர் பதவி கேட்டனர். பின்னர் அமைச்சர் பதவியும் கேட்டும் முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆனால் கூட்டணியின் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி இக்கோரிக்கைகளுக்கு பதில் சொல்லாமல் மவுனமாகவே இருந்து வந்தார்.
மூன்றாண்டுகள் ஆட்சி நிறைவடைந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜக புதுச்சேரியில் தோல்வியடைந்தது. இத்தோல்விக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவரான ரங்கசாமி மீதும் அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆளுநர் மாளிகைக்கே சென்று ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணனிடம் பாஜக எம்எல்ஏ-க்கள் மனுவாக அளித்தனர். அவர்களுடன் பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ-க்களும் சென்றனர்.
ஆனால், அது தொடர்பான புகைப்படங்களை ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் வெளியிடவில்லை. ஆனால், ஆளுநரிடம் நேரடியாகவே குற்றம் சாட்டிய ஆடியோ பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ-வான அங்காளன் மூலமாக வெளியானது. அதில், முதல்வர் தங்களுடன் கலந்து ஆலோசிப்பதில்லை. அதிகளவில் ரெஸ்டோ பார்கள் திறந்ததில் ஊழல் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அந்த ஆடியோ மூலமாக வெளியானது.
பாஜக மாநிலத் தலைவரான மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதியாலும் பாஜக எம்எல்ஏ-க்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இவ்விவகாரங்கள் தொடர்பாக கட்சி மேலிடத்துக்கு அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக எம்எல்ஏ-க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், வெங்கடேசன், பாஜக ஆதரவு சுயேச்சைகள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் டெல்லிக்குச் சென்றுள்ளனர்.நேற்று நாடாளுமன்ற கூட்டம் நடந்ததால் யாரையும் சந்திக்கவில்லை.
புதன்கிழமை அவர்கள் பாஜக முக்கிய தலைவர்களைச் சந்தித்து முதல்வருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடுக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுபற்றி பாஜக எம்எல்ஏ-க்கள் தரப்பில் கேட்டதற்கு, “ஆளுநரிடம் தெரிவித்த பிரச்சினை தொடர்பாக பாஜக தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பொதுச்செயலர் சந்தோஷ் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளோம். தற்போது மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வாலை சந்தித்து பேசினோம். இன்று மாலை கட்சியின் பிற முக்கியத் தலைவர்களை சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும்.
அப்போது, முதல்வர் பற்றியும் இங்குள்ள சூழல் தொடர்பாகவும் தெரிவிப்போம். முக்கியமாக முதல்வர் ரங்கசாமியின் செயல்பாட்டால் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, தோல்வி மற்றும் ரெஸ்டோ பார் அதிகரிப்பு உள்ளிட்டவை பற்றி தெரிவிப்போம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு ரங்கசாமி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தந்தால் தான் நல்லது என வலியுறுத்துவோம். இது தொடர்பாக பிரதமரையும் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அனைவரையும் சந்தித்த பிறகுதான் புதுச்சேரிக்கு திரும்புவோம்” என்றனர்.
இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்பியும் டெல்லி சென்றுள்ளார். அவரிடம் இதுபற்றி கேட்டதற்கு, “நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்தேன். ஆளுநரைச் சந்திக்கும் முன்பு என்னிடம் பாஜக எம்எல்ஏ-க்கள் தெரிவித்தனர். ஆனால், முதல்வரை பற்றி புகார் தெரிவிக்கச் செல்வதாக அவர்கள் என்னிடம் கூறவில்லை. தற்போது பாஜக மேலிடத் தலைவர்களை சந்திக்க பாஜக எம்எல்ஏ-க்கள் டெல்லி வந்துள்ளனர்.
அவர்கள் சந்தித்துச் சென்ற பிறகு, உண்மை நிலவரம் அறிய கட்சி மேலிடம் பொறுப்பாளர்களை புதுச்சேரிக்கு அனுப்பும். அவர்கள் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். ஏற்கெனவே முதல்வர் ரங்கசாமியை இதுதொடர்பாக சந்தித்துப் பேசி அவர் தெரிவித்த கருத்துகளையும் கட்சி மேலிடத்துக்கு தெரிவித்துள்ளேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT