Published : 03 Jul 2024 04:06 PM
Last Updated : 03 Jul 2024 04:06 PM
சென்னை: தமிழகத்தில் கோடை வெப்பத்தால் குறைந்திருந்த ஆவின் பால் கொள்முதல் தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஆவின் பால் கொள்முதல் 35.54 லட்சம் லிட்டராக இருந்ததாக ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நடப்பாண்டில் மார்ச் முதல் மே மாதம் வரை கோடைகாலம் நிலவியது. இக்கால கட்டத்தில் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில், பல மாவட்டங்களில் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரித்தது. இதன் காரணமாக, கால்நடைகளுக்கு வெப்ப அழுத்தம் ஏற்பட்டு, உள்நாட்டு கால்நடை மற்றும் கலப்பின, அயல்நாட்டு கலப்பின கறவை மாடுகளின் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக, தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் தினசரி சராசரி கொள்முதல் பால் அளவு குறைந்து வந்தது. அதிலும், ஏப்ரல் மாதத்தில் பால் கொள்முதல் 26 லட்சம் லிட்டராக சரிந்தது.
இதன்பிறகு, கோடைகாலம் முடிந்த தென்மேற்கு பருவமழைகாலம் தொடங்கியவுடன் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. மேலும், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால், பால் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியது. ஆவினுக்கான தினசரி பால் கொள்முதலும் 33 லட்சம் லிட்டராக உயர்ந்தது. இந்நிலையில், தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் தினசரி பால் கொள்முதல் தற்போது 35 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.
இது குறித்து ஆவின் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஆவின் பால் தினசரி கொள்முதல் கடந்த மாதம் 33 லட்சம் லிட்டராக உயர்ந்தது. இது, தற்போது 35 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஆவின் பால் கொள்முதல் 35.54 லட்சம் லிட்டராக இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதிகபட்சமாக தினசரி பால் கொள்முதல் 35.83 லட்சம் லிட்டராக இருந்தது. பல மாவட்டங்களில் பரவலாக பெய்த மழையால், பசும்தீவனம் அதிகரித்துள்ளது. பசு, எருமை மாடுகள் கன்றுகளை ஈன்றுள்ளன. இது, வரும் செப்டம்பர் வரை நடைபெறும். இதன் காரணமாக, பால் உற்பத்தி அதிகரித்து வருகிறது. தினசரி ஆவின் பால் கொள்முதல் மேலும் உயரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT