Published : 03 Jul 2024 03:26 PM
Last Updated : 03 Jul 2024 03:26 PM
சென்னை: நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்த விவரத்தை தமிழக அரசு வெளியிடாதது ஏன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நீட் விலக்கு என்று நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதன் ஒரு பகுதியாக, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி, ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள குளறுபடிகளை, தமிழக பாஜக பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது.
நீட் தேர்வு வந்த பிறகு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, மத்திய பாஜக அரசின் பரிந்துரையின் அடிப்படையில் தீர்வு காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆனால், நீட் தேர்வு வருவதற்கு முன்பு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விவரங்களை, பலமுறை வலியுறுத்தியும், திமுக அரசு அமைத்த இந்தக் குழு வழங்க மறுப்பது ஏன்? முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன?
நீட் தேர்வுக்கு முன்பாக, எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்வி இடம் பெற்றனர் என்ற உண்மையைக் கூறினால், நீட் தேர்வு வந்த பிறகே, அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டு, திமுக உருவாக்கிய போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
நீட் தேர்வு முறையை ரத்து செய்ய மறுக்கும் பாஜக அரசை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், அண்ணாமலை இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT