Published : 03 Jul 2024 02:17 PM
Last Updated : 03 Jul 2024 02:17 PM

“போதைப் பொருள் விற்பனையில் புதிய பரிமாணம்” - தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

எடப்பாடி பழனிசாமி

சென்னை: போதை மருந்து கடத்தலுக்கு, துறைமுகங்கள், கொரியர் சர்வீஸ் போன்றவற்றை பயன்படுத்தி வந்த கடத்தல் பெரும் புள்ளிகள், தற்போது உச்சகட்டமாக சிறைச்சாலையையே போதைப்பொருள் கடத்தல் கேந்திரமாக பயன்படுத்தியுள்ளது சமூக பொறுப்புள்ள எவராலும் ஏற்க முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திமுக ஆட்சியில் கடந்த மூன்றாண்டுகளாக பல்வேறு வடிவங்களில் போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வந்த நிலையில், நேற்றைய ஊடகங்களில் வந்த செய்தி தமிழக மக்களின் மனதைப் பதற வைத்திருக்கிறது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பவர்களைக் கைது செய்து, அவர்களை திருத்தும் இடமாகத் திகழ்ந்த தமிழக சிறைச்சாலைகள், தற்போது பாதுகாப்பாக போதைப் பொருட்கள் விற்பனை மேற்கொள்ளும் இடமாக மாறிவிட்டதா? என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

போதைப்பொருள் விற்பனையை பல்வேறு பாணிகளில் விற்று வந்த நிலையில், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவிக்கும் சிறைவாசிகள், சிறையில் இருந்தபடியே தன் குடும்பத்தினருடன் கைப்பேசியிலும், வீடியோ காலிலும் பேசி, மெத்தபட்டமைன் கடத்தலிலும், விற்பனையிலும் ஈடுபட்டு வந்ததாக நேற்றைய ஊடகங்களில் வந்த செய்தி தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சியில் காவல்துறை திமுக-வின் ஏவல்துறையாக மாறி, தவறிழைக்கும் ஆளும் கட்சியின் நிர்வாகிகள் மீதும், அவர்களது ஆதரவு பெற்ற குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் உளவுத்துறை, சட்டம்-ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு பிரிவுகளுடன் தற்போது சிறைத்துறையும் இணைந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் மெத்தபட்டமைன் கடத்தலில் கைதாகி சிறையில் உள்ள காசிலிங்கம் தனது மனைவியுடன் ஒருங்கிணைந்து, செங்குன்றத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் அருகே மெத் சரக்குக்கான பிக்கப் பாயிண்டை அமைத்துள்ளார் என்றும், போதைப்பொருள் விற்பனை குறித்து சிறையில் இருந்தவாறே தனது மனைவியிடம் வீடியோ காலில் பேசியுள்ளார் என்று, நேற்று ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. சிறைத்துறை அதிகாரிகள் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனித்தார்களா? இல்லை போதைப்பொருள் விற்பனைக்கு துணை போனார்களா என தெரியவில்லை என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இந்த சம்பவத்தைக் கண்டறிந்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதுடன், தமிழக காவல் துறைக்கும், சிறைத் துறைக்கும் இதுபற்றிய விபரங்களை அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் உள்ள மிக முக்கியமான புழல் சிறையில் உயர் அந்தஸ்தில் பல அதிகாரி இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

எப்போதும் 'தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது போல்' வருமுன் நடவடிக்கை எடுக்காத திமுக அரசின் காவல்துறை, குற்றம் நிகழ்ந்தபின், தனது உறக்கத்திலிருந்து விழித்து, நிகழ்ந்த சம்பவத்தை மூடி மறைப்பதிலும், அக்குற்றத்தை யார் தலையில் சுமத்தலாம் என்பதிலேயுமே கடந்த மூன்றாண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

சிறைத்துறையும், காவல்துறையும் இனியாவது விழித்துக்கொண்டு சிறைவாசி யார், யாருக்கு பேசினார், யார் அவருக்கு மெத்தபட்டமைன் விநியோகித்தது, அதற்குப் பணப்பரிமாற்றம் எப்படி நடந்தது என்பதைக் கண்டறிந்து, இந்த குற்றச் சம்பவத்திலாவது மூலக் குற்றவாளியையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் சட்டத்தின் பிடியில் ஒப்படைத்து, கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்று அடிக்கடி சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுக திராவிட மாடல் முதல்வர் தற்போது இதுகுறித்து என்ன பதில் அளிப்பார்?.

ஆளும் கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவுடன் செயல்படுபவர்களே இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக செய்திகள் தெரிய வருவதால், கையறு நிலையில் உள்ள பொம்மை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டார்கள்.

போதை மருந்து கடத்தலுக்கு, துறைமுகங்கள், கொரியர் சர்வீஸ் போன்றவற்றை பயன்படுத்தி வந்த கடத்தல் பெரும் புள்ளிகள், தற்போது உச்சகட்டமாக சிறைச்சாலையையே போதைப்பொருள் கடத்தல் கேந்திரமாக பயன்படுத்தியுள்ளது சமூக பொறுப்புள்ள எவராலும் ஏற்க முடியாது. இந்தப் பிரச்சினையில் உண்மையான அக்கறையுடன் மத்திய அரசு தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்களின் நலன் கருதி வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x