Published : 07 May 2018 03:09 PM
Last Updated : 07 May 2018 03:09 PM
புதுச்சேரியிலிருந்து சென்னை மற்றும் சேலத்துக்கு ஜூலை 15-ம் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்கப்பட்ட உள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. கட்டணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து கடந்த 2013-ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மற்றும் 2015-ம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனமும் புதுச்சேரியில் இருந்து பெங்களூரூக்கு விமான சேவையைத் தொடங்கின. ஆனால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் இச்சேவைகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
மத்திய அரசு நாட்டில் விமான சேவையை அதிகரிக்கும் நோக்கில் புதிய விமான கெள்கையை அறிவித்தது. அதன்படி உதான் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்க விமான நிறுவனங்களுக்கு பாதி கட்டணத்தை, மத்திய அரசே ஏற்கும் எனவும் அறிவிப்பு வெளியிட்டது. அத்திட்டத்தில் சேர்ந்து புதுச்சேரியில் இருந்து தடைப்பட்டிருந்த விமான சேவை மீண்டும் தொடங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஹைதராபாத்திற்கு விமான சேவையைத் தொடங்கியது. இதற்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைத்தைத் தொடர்ந்து, மீண்டும் பெங்களூரூக்கு விமான சேவை தொடங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் விமான சேவை தொடங்கியது.
இந்நிலையில் வருகின்ற ஜூலை மாதம் 15 ம் தேதி முதல் சென்னை மற்றும் சேலத்திற்கு புதிய விமான சேவையை தொடங்க உள்ளது ஏர் ஒடிஷா நிறுவனம். பயணத்துக்கான முன்பதிவை www.airodisha.com என்ற தனது இணைய தளத்தின் வாயிலாக தொடங்கியுள்ளது.
அதன்படி, சென்னையிலிருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் விமானம் காலை 8.55 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். மீண்டும் மதியம் 1.15 மணிக்கு புதுச்சேரியிலிருந்து புறப்படும் விமானம் மதியம் 2 மணிக்கு சென்னையை சென்றடையும். அதேபோல், காலை 9.10 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம் காலை 10 மணிக்கு சேலம் சென்றடையும். மீண்டும் மதியம் 12.15 மணிக்கு சேலத்திலிருந்து புறப்படும் விமானம் மதியம் 1 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். பயண நேரம் 45 நிமிடங்கள்தான். தற்போது முன்பதிவும் தொடங்கியுள்ளது.
கட்டண விவரம்:
1. சென்னை - புதுச்சேரி ரூபாய் 1,940.
2. புதுச்சேரி - சென்னை ரூபாய் 1,470.
3. புதுச்சேரி - சேலம் ரூபாய் 1,550.
4. சேலம் - புதுச்சேரி ரூபாய் 1,550.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT