Published : 03 Jul 2024 04:42 AM
Last Updated : 03 Jul 2024 04:42 AM
சென்னை: 2024-ம் ஆண்டு குறுவை பருவ பயிர்களை வரும் 31-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என்று விவசாயிகளை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண்மைக்கான 2024-2025-ம் நிதி ஆண்டின் தனி நிதிநிலை அறிக்கையில் ரூ.1,775 கோடி நிதி ஒதுக்கீட்டில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலுள்ள 37 மாவட்டங்களில் 2024-2025-ம் ஆண்டில் குறுவை, சம்பா, நவரை- கோடை ஆகிய மூன்று பருவங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த வேளாண்மை-உழவர் நலத்துறையால் அரசாணை கடந்த 28-ம் தேதி வெளியிடப்பட்டது.
2024-ம் ஆண்டு குறுவை பருவத்தில் நெல், மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, ராகி, சோளம், கம்பு, தட்டைப்பயறு, எள், பருத்தி, சாமை மற்றும் கொள்ளு ஆகிய 14 வேளாண் பயிர்களுக்கும் வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், கத்திரி, வெண்டை, மஞ்சள், தக்காளி, பூண்டு, இஞ்சி மற்றும் முட்டைகோஸ் ஆகிய 12 தோட்டக்கலைப் பயிர்களுக்கும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
2024-ம் ஆண்டு குறுவை பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கான விவசாயிகள் பதிவு 2024 ஜூன் 21-ம் தேதி முதல் மத்திய அரசின் தேசிய பயிர்காப்பீட்டு வலைதளத்தில் மேற்கோள்ளப்பட்டு வருகிறது. இதில், முக்கிய பயிரான குறுவை நெற்பயிரை 2024 ஜூலை 31-ம் தேதி வரை விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தின்கீழ் மகசூல் இழப்பு, விதைப்பு, நடவு செய்ய இயலாத நிலை, விதைப்பு, நடவு பொய்த்தல், பகுதி சார்ந்த மற்றும் பயிர் வளர்ச்சி கால இடர் நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு போன்ற இனங்கள் காப்பீடு செய்யப்படுகின்றன.
எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சிநோய் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு அருகிலுள்ள பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவுக்கடன் சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீட்டுக் கட்டணம் செலுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (ஜூலை 31) பயிர்களை காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், புயல், வெள்ளம் ஆகியவற்றால் பயிர் சேதம் அடைந்த பிறகு அப்பயிரை காப்பீடு செய்ய இயலாது. காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படமாட்டாது.
விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் - விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ள வேண்டும் இது குறித்தகூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் அல்லது வங்கி கிளைகளை அணுகலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT