Published : 03 Jul 2024 04:36 AM
Last Updated : 03 Jul 2024 04:36 AM
சென்னை: சென்னையில் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் விதிகளை மீறி ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது தொடர்பாக 51 ஆயிரத்து 414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.2 கோடியே 57 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில், உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் போலீஸ், வழக்கறிஞர், ஊடகம் என ஸ்டிக்கர்கள் ஒட்டதடை விதித்து சென்னை போக்குவரத்து காவல் துறை எடுத்துள்ள நடவடிக்கையை தமிழகம் முழுவதும் அமல்படுத்தக் கோரி தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் சார்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், வாகனங்களில் தடைசெய்யப்பட்ட ‘சன் கன்ட்ரோல் ஃபிலிம்’ ஒட்டப்படுவதை தடுப்பதற்கும், அதை கண்காணிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி அதுபோன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டுவோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் வாகனங்களில் மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை ஒட்டுபவர்கள் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மே மாதம் வரை சென்னை மாநகரில் ‘சன் கன்ட்ரோல் ஃபிலிம்’ ஒட்டியதாக 6 ஆயிரத்து 279 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, ரூ.31 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல போக்குவரத்து விதிமீறல்கள், தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் சட்டவிரோதமாக ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது தொடர்பாக 51 ஆயிரத்து 414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை ரூ.2 கோடியே 57 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து வீதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது உடனுக்குடன் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து நீதிபதிகள், சென்னையில் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் போலீஸ், வழக்கறிஞர், ஊடகம் என சட்டவிரோதமாக ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்தியது குறித்து காவல்துறை இருவாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT