Published : 03 Jul 2024 05:04 AM
Last Updated : 03 Jul 2024 05:04 AM
சென்னை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதால் சென்னை குடிநீர் தேவைக்காக ஜூலை மாதம் முதல் திறக்கப்படும் முதல் தவணை கிருஷ்ணா நதிநீரை திறந்துவிட தற்போது வாய்ப்பில்லை என்று தமிழக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை குடிநீர் தேவைக்காக 15 டிஎம்சி (ஒரு டிஎம்சி என்பது ஆயிரம் மில்லியன் கனஅடி) கிருஷ்ணா நதிநீரை வழங்கும் திட்டம் தமிழ்நாடு - ஆந்திர மாநிலங்களுக்கிடையே 1983 ஏப்.18-ம் தேதி இறுதி செய்யப்பட்டது. அதன்படி, கிருஷ்ணா நதிநீர் கால்வாய் வழியாக வரும்போது ஆவியாதல் காரணமாக 3 டிஎம்சி இழப்பு ஏற்படும். அதுபோல 12 டிஎம்சி தண்ணீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும்.
ஆண்டுதோறும் முதல் தவணையாக ஜூலை மாதம் முதல் அக்டோபர் வரை 4 மாதங்களில் 8 டிஎம்சி தண்ணீரும், 2-ம் தவணையாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதங்களில் 4 டிஎம்சி தண்ணீரும் திறந்துவிடப்பட வேண்டும். முதன்முதலில் 1996-ம் ஆண்டு கிருஷ்ணா நதிநீர் சென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதிநீர் கால்வாய் வழியே திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைப்பாக்கம் ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது.
பூண்டி ஏரிக்கு வந்துசேரும் கிருஷ்ணா நீர் அங்கிருந்து செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஏரிகள் வழியாக சென்னை குடிநீர் தேவைக்கு குழாய் மூலம் எடுத்து வரப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. 1996-ம் ஆண்டு முதல் இதுவரை 112.258 டிஎம்சி கிருஷ்ணா நீர் பெறப்பட்டுள்ளது. கடந்தாண்டு 2.412 டிஎம்சி தண்ணீர் பெறப்பட்டது.
தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு மற்றும் சென்னை மாநகரின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு முதல் தவணை கிருஷ்ணா நதிநீரை திறந்துவிட ஆந்திர அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து தமிழக நீர் வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆந்திர மாநிலம் சைலம் அணையில் இருந்து சோமசீலா அணைக்கும் அங்கிருந்து கண்டலேறு அணைக்கும் கிருஷ்ணா நதிநீர் வந்து சேரும். சென்னை குடிநீர் தேவைக்கு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.
இந்த அணையில் 9 டிஎம்சி-க்கு மேல் தண்ணீர் இருந்தால் மட்டுமே அதை பம்ப் செய்து கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் அனுப்ப முடியும். 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் நேற்றைய நிலவரப்படி 8.42 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதனால், சென்னை குடிநீர் தேவைக்கு முதல் தவணை கிருஷ்ணா நீரை தற்போது திறந்துவிட வாய்ப்பில்லை'’ என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT