Published : 28 Aug 2014 11:17 AM
Last Updated : 28 Aug 2014 11:17 AM

திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனை கட்டாயமாக்கப்படுமா?: மத்திய, மாநில அரசுகள் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மையால் திருமணங்கள் தோல்வியடைவதைத் தடுக்க திருமணத்துக்கு முன் ஆணுக்கும், பெண்ணுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்வதை கட்டாயமாக்குவது குறித்து பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.

திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரியும் பெண்ணுக்கும், தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த 32 வயது இளைஞருக்கும் 2013 ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில மாதங்களில், அப்பெண் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தனது கணவர் ஆண்மைக்குறைவு உள்ளவர் என்றும், அதை மறைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். பின்னர், குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் கணவர், மாமனார், மாமியார் மற்றும் திருமணத்தை முன்னின்று நடத்திய தம்பதிகள் மீதும், திருச்சி சமூகநலத் துறை அதிகாரியிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில் திருச்சி 3-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் கணவர் வீட்டார் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கணவர் உள்ளிட்ட 5 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்து நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:

பெண் குழந்தைகளை பாரமாக தற்போதும் கருதுகின்றனர். மகளை திருமணம் செய்யப் போகும் ஆண் குறித்து முறையாக விசாரிக்காமல், திருமணம் என்ற பெயரில் பெண்களை வெளியேற்றுகின்றனர். பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் ஆண்மைக் குறைவு பிரதான காரணமாகச் சொல்லப்படுகின்றன. மண முறிவும் சமூகப் பிரச்சினைகளில் ஒன்றுதான். ஆண்மைக்குறைவு, பெண்ணுக்கு மலட்டுத்தன்மை இருப்பதால் பெரும்பாலான திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன. சமூகத்துக்கு அஞ்சியும், குடும்பத்தில் மூத்தவர்களின் கட்டாயத்தின்பேரிலும், தகுதியின்மை, இயலாமையை மறைத்து திருமணங்கள் நடத்தப்படுகின்றன. ஆண்மைக் குறைபாடு உண்மையான காரணமாக இருந்தாலும் பலர், தங்களுக்கு வசதியாக வேறு காரணங்களைக் கூறி விவாகரத்து கோருவதும் அதிகரித்து வருகிறது.

ஆண்மைக் குறைபாடு, பெண்களிடம் தாம்பத்திய உறவில் ஆர்வம் குறைவாக இருத்தல் ஆகியன திருமணங்கள் தோல்வியடைய பிரதான காரணங்களாக உள்ளன. ஆண், பெண் இருவரில் ஒருவரிடம் ஏற்படும் இயலாமை, நல்ல நிலையில் உள்ள மற்றவரையும் பாதிக்கும். பெண்களுக்குரிய அடிப்படை மனித உரிமைகள் மற்றும் அர்த்தமுள்ள, மேன்மையாக வாழும் உரிமைகள் மீறப்படுவதால் பெரும்பாலான வழக்குகளில் பெண்கள் அதிகளவில் பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த சோகத்தை தவிர்க்க வேண்டும். இதை தடுத்து நிறுத்தாவிட்டால் அப்பாவிகளின் குடும்பங்கள் மன உளைச்சலுக்கு ஆளாவது தொடரும். மேலும், இப்பிரச்சினை வேறு பல குற்றங்களுக்கும் வழி வகுக்கும். இப்பிரச்சினையில் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.

திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டால் ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள், எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி தொற்று உள்ளவர்கள் திருமணம் செய்வதை தடுக்க முடியும். இதுபோன்ற நபர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும். இது தொடர்பாக மருத்துவமனைகள், நீதிமன்றங்களில் இருந்து புள்ளி விவரங்களைச் சேகரித்து ஆய்வுசெய்ய வேண்டும். இப்பிரச்சினையில் மக்கள் நலன் கருதி, நீதிமன்றத்தின் சில கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்.

அதன்படி ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை போன்ற காரணங்களால் திருமணங்கள் தோல்வி அடைவது தெரியுமா? இதுபோன்ற திருமணங்களைத் தடுக்க ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணத்துக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை கட்டாயமாக்கப்படுமா?

ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மையை காரணமாக வைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள விவாகரத்து வழக்குகளை தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 6 மாதம் அல்லது ஒரு ஆண்டில் முடிக்க ஏன் மத்திய அரசு உரிய சட்டத் திருத்தம் கொண்டு வரவில்லை?

ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மையை மறைத்து திருமணம் செய்து மோசடி செய்பவர்களுக்கு தண்டனை வழங்கவும், பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்கவும் மத்திய அரச ஏன் விதிகள் கொண்டு வரவில்லை?

இப்பிரச்சினையைத் தடுக்க, மேற்கொண்ட பிற நடவடிக்கைகள் என்ன? ஆகிய நான்கு கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செப். 5-க்குள் பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

சென்னை மகளிர் நீதிமன்றத்தில் 2009 முதல் 2013 வரை 5 ஆண்டுகளில் விவாகரத்து கோரி 20 ஆயிரத்து 877 வழக்குகள் தாக்கலாகி உள்ளன. இதில் ஆண்மைக்குறைவு காரணமாக தொடரப்பட்ட வழக்குகள் மட்டும் 2040 என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x