Published : 27 May 2018 09:39 AM
Last Updated : 27 May 2018 09:39 AM

சிக்னல் கோளாறை சரிசெய்ய இனி சில நிமிடங்கள் போதும்; தெற்கு ரயில்வேயில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்- சென்னை கடற்கரை, அரக்கோணம் உட்பட 100 ரயில் நிலையங்களில் சோதனை ஓட்டம்

ரயில்வேயில் சிக்னல் கோளாறை சில நிமிடங்களில் சரிசெய்யும் வகையில் தெற்கு ரயில்வே புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.

நம் நாட்டில் ஓடும் ரயில்களில் 10-ல் 4 ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுவதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ரயில் தண்டவாள பராமரிப்புப் பணி பிரதான காரணமாக இருந்தாலும், அடுத்த முக்கியப் பிரச்சினையாக இருப்பது சிக்னல் தொழில்நுட்ப கோளாறுதான்.

அதிலும், மும்பை, டெல்லி, சென்னை போன்ற இடங்களில் அதிக அளவில் ரயில்கள் இயக்கம் மற்றும் இயற்கை சீற்றங்களால் அடிக்கடி சிக்னல் தொழில்நுட்பம் கோளாறு ஏற்படுகிறது. இதனால், 2 முதல் 4 மணி நேரம் வரையில் ரயில்சேவை பாதிக்கும்.

எனவே, இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ரயில்வேயில் சிக்னல் தொழில்நுட்ப அதிகாரிகளால் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வேயில் இதுகுறித்து ஓராண்டாகத் தொடர்ந்து பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொண்டு புதிய தொழில்நுட்பத்தை, சிக்னல் பிரிவு மூத்த பொறியாளர் ஜோதி கண்டுபிடித்துள்ளார்.

இதுதொடர்பாக ‘தி இந்து’விடம், அவர் கூறியதாவது:

ரயில்கள் இயக்கத்தைக் கண்காணித்து, சீராகவும் பாதுகாப்பாகவும் இயக்க சிக்னல் தொழில்நுட்பம் மிகவும் அவசியமாக இருக்கிறது. சிக்னல் இயக்கத்தை பாதைகளோடு கொண்டு செல்ல ஆங்காங்கே பாயின்ட்கள் (ஒவ்வொரு 63 மீட்டருக்கும் ஒரு பாய்ன்ட்) அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அவதி

சாதாரணமாக முக்கிய வழித்தடத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டால், கோளாறு ஏற்பட்டுள்ள பாயின்ட் பகுதியை தொழில்நுட்ப அலுவலர்கள் கண்டுபிடிப்பார்கள். அதன்பிறகு, சிக்னல் பழுது சரிசெய்யப்பட்டு, ரயில்கள் வரிசையாக இயக்கப்படுகின்றன. இந்தப் பணியை மேற்கொள்ள சுமார் 2 முதல் 4 மணி நேரம் வரை ஆகிவிடும். இதனால், ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்படுவார்கள். தொழில்நுட்பப் பிரிவு அலுவலர்களும் பணிச் சுமையால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், சிக்னல் பழுதை உடனடியாகக் கண்டறிந்து சரிசெய்யும் வகையில் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டுவர வேண்டுமென சிக்னல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை தலைமை அதிகாரி எம்.இளவரசன் அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் நான் இதை ஆர்வமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டேன். இந்தப் பிரச்சினையை வெளிநாடுகளில் எப்படி மேற்கொள்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்தேன்.

கூடுதலாக 5 மணிநேரம்

வழக்கமான பணியைக் காட்டிலும் தினமும் இதற்காக 5 மணி நேரம் கூடுதலாக எடுத்துக் கொண்டு ஓராண்டு பணியாற்றினேன். இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டறிய தெற்கு ரயில்வே அதிகாரி டி.எம். ஸ்ரீதர் முக்கிய வழிகாட்டியாக இருந்து சில ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிலையில், சிக்னல் கோளாறு ஏற்பட்ட அடுத்த 2 நிமிடங்களில் எங்கே கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதைக் காணும் வகையில் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளேன். இந்தப் புதிய தொழில்நுட்பம் மூலம் சர்க்யூட் இணைத்து புதிய பட்டன் வசதி சம்பந்தப்பட்ட ரயில் நிலைய மேலாளர்களின் அலுவலகத்தில் அமைக்கப்படும்.

இதனால், சிக்னல் கோளாறு ஏற்பட்ட 2 நிமிடங்களில் சம்பந்தப்பட்ட ரயில் நிலைய மேலாளருக்கு தகவல் கிடைக்கும். எந்த இடம் என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். பிறகு, சம்பவ இடத்துக்கு தொழில்நுட்ப அலுவலர்கள் சென்று, அடுத்த 10 முதல் 15 நிமிடங்களில் பழுதை சரி செய்யலாம்.

பாராட்டும் சான்றிதழும்

இந்தப் புதிய தொழில்நுட்பச் செயல்பாடு குறித்து ஈரோடு – கரூர் வழித்தடத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு, தற்போது வில்லிவாக்கம், அம்பத்தூர், விழுப்புரம், திருச்சி, சென்னை கடற்கரை, அரக்கோணம் உட்பட 100 ரயில் நிலையங்களில் சோதனை ஓட்டம் அடிப்படையில் இந்தப் புதிய தொழில்நுட்பம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, படிப்படியாக நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்தப் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்ததற்காக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்ஷிரேஸ்தா எனக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x