Last Updated : 02 Jul, 2024 08:47 PM

 

Published : 02 Jul 2024 08:47 PM
Last Updated : 02 Jul 2024 08:47 PM

“சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு முன்வரவில்லை என ஸ்டாலின் கூறுவது தவறு” - இபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி

மேட்டூர்: “சாத்தான்குளம் விவகாரத்தில், சிபிஐ விசாரணை நடத்திட அதிமுக முன்வரவில்லை என முதல்வர் கூறியது தவறு” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: “அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி. உண்ணாவிரதம் மேற்கொண்டன. ஆனால், இறந்தவர்களின் பாதிப்பை முதல்வர் உணராமல், சிபிசிஐடி விசாரிக்கும் என காவல்துறை மானிய கோரிக்கை பதிலுரையில் தெரிவித்தார். அப்போது சாத்தான்குளம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த அதிமுக அரசு முன்வரவில்லை என தமிழக முதல்வர் தெரிவித்தது தவறு.

இந்த சம்பவம் 24.06.20-ல் நடந்த நிலையில், அதிமுக அரசு, 28.06.20-ல் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என அறிவிப்பும், 29.06.20 -ல் அரசாணையும் வெளியிட்டது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 30.06.2020-ல் வழக்கு விசாரணை வந்த போது, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் படி, 1.07.2020 - ல் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. 10.07.2020 அன்று சிபிசிஐடியிடம் இருந்த வழக்கு, சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் விவகாரத்தில், தவறான செய்தியை அரசின் அழுத்ததின் காரணமாக, மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரித்தால் உண்மை குற்றவாளி தப்பிவிடுவார். ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு தீர்வு காண வேண்டும் என்றால் சிபிஐ தான் விசாரிக்க வேண்டும். தவறான செய்தியை சொல்லி வரும் நிலையில், நான் விளக்கம் அளித்து இருக்கிறேன்.

அதிமுக ஆட்சியின் போது, கரோனா காலத்தில் 10 மாதம் டாஸ்மாக் கடைகளை மூடிய போது கூட கள்ளச் சாராய உயிரிழப்பு இல்லை. ஆனால், இன்றைக்கு கள்ளச் சாராயம் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. அதிமுக- வின் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ சார்பில் கவன ஈரப்பு தீர்மான கொண்டு வரப்பட்டது. ஆனால், திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. இந்த சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, எஸ்பியிடம் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. இதனை தடுத்து நிறுத்துங்கள் என இரண்டரை வருடங்களாக தெரிவித்து வருகிறேன்.

கள்ளச் சாராயத்தை தடுக்க உண்ணாவிரதம் இருந்தபோது, நல்ல காரியம் என நாம் தமிழர் கட்சி துணை நின்றார்கள், ஆதரவு தெரிவித்தனர். அவர்களும், உண்ணாவிரதம் இருந்தால், அதிமுகவும் ஆதரவு கொடுக்கும். அதிமுகவை பயன்படுத்தினால் தான் ஓட்டு கிடைக்கும் என முடிவு செய்துள்ளனர். அதிமுக தலைவர்கள் படம் இருந்தால் தான் வாக்கு விழும் என எதிர் அணியினர் நினைப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. இது எங்கள் தலைவருக்கான மரியாதை என உணர வேண்டும்.

திமுகவின் நிலைப்பாடு இரட்டை வேடம். மக்களவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பேசவில்லை. நீட் தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும் என கேட்கின்றனர். முதல்வருக்கு இண்டியா கூட்டணி ஆதரவு இல்லை. 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீட் ரத்து செய்ய என்ன முயற்சி செய்வார்கள் என பார்ப்போம். அதிமுகவிற்கு நாட்டு மக்களின் பிரச்சினை தான் முக்கியம். அதிமுகவை பொறுத்தவரை, எங்களுக்கு எஜமான்கள் தமிழ்நாட்டு மக்கள் தான்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x