Published : 02 Jul 2024 08:27 PM
Last Updated : 02 Jul 2024 08:27 PM
மதுரை: கிராமங்களுக்கு செல்லும் சேவை சாலையை அடைக்கும் கப்பலூர் சுங்கச்சாவடியின் முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டதால் முயற்சி கைவிடப்பட்டது.
திருமங்கலம் அருகே கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடி விதிகளை மீறி நகரிலிருந்து 2 கிமீ தொலைவுக்குள் உள்ளது. இதனை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். திமுக ஆட்சி அமைந்ததும் இந்த சுங்கச்சாவடி அகற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். எனினும் இந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இந்தச் சூழலில் கட்டணம் வசூலிப்பதிலும் சுங்கச்சாவடி நிர்வாகம் அடிக்கடி உள்ளூர் மக்களிடம் பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் மறியல், உண்ணாவிரதம் என தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடக்கிறது. எனினும் சுங்கச்சாவடி நிர்வாகம் இப்பகுதி மக்களின் நம்பிக்கையை பெற எவ்வித நடவடிக்கையும் எடுப்பதற்கு மாறாக, பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் மட்டுமே செயல்படுவதாக குற்றச்சாட்டப்படுகிறது.
இந்த சூழலில், உள்ளூர் வாகனங்கள் 4 ஆண்டுகளாக சுங்கச்சாவடியை பயன்படுத்தியதற்காக ரூ. 2 லட்சம் முதல் 4 லட்சம் வரையில் கட்டணத்தை ஒருவாரத்தில் செலுத்துமாறு சுங்கச்சாவடி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அப்படி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. இதைக் கண்டித்து திருமங்கலம் பகுதி வணிகர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, இன்று சுங்கச்சாவடி அருகே உச்சப்பட்டி, தர்மத்துப்பட்டி செல்லும் சாலையை அடைக்க சுங்கச்சாவடி நிர்வாகம் தடுப்புகளை அமைத்தது. இதையறிந்த இப்பகுதி கிராமத்தினர் பலரும் சுங்கச்சாவடி முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, சாலையை அடைக்கும் பணி தொடர்ந்தது.
மக்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடும் எதிர்ப்பை காட்டினர். இதனால் சாலையை அடைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இது குறித்து கிராமத்தினர் கூறுகையில், “சுங்கச்சாவடியை கடக்க விரும்பாதவர்கள் பயணிக்க தனி சேவை சாலை இருக்க வேண்டும். இதுபோன்ற சாலைகளை எல்லாம் கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் அடைத்து வருகிறது. இது எங்குமே இல்லாத கொடுமை. ஹரீஷ் உணவகம் அருகே பிரதான சாலையிலிருந்து சேவை சாலைக்கு செல்ல தற்போது வழி உள்ளது. இந்த சேவை சாலையிலிருந்து உச்சப்பட்டி, தர்மத்துப்பட்டி கிராமங்களுக்கு செல்லலாம்.
பிரதான சாலையிலிருந்து சேவை சாலை இணைப்பை அடைத்துவிட்டால் மறவன்குளம் சென்று மீண்டும் சர்வீஸ் சாலையை அடைய வேண்டும். அதேபோல் உச்சப்பட்டியிலிருந்து திருமங்கலம் செல்லும் வாகனங்கள் சுங்கச்சாவடிவரை வந்து மீண்டும் திருமங்கலம் செல்ல வேண்டும்.
அங்கு வாகனங்கள் திரும்ப சரியான வசதி இல்லாததால், விபத்து நடக்க அதிக வாய்ப்புள்ளது. சுங்கச்சாவடியை தவிர்க்க உச்சப்பட்டி சாலையை சில வாகனங்கள் பயன்படுத்துவதால், இந்த அடைப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் விபத்தை தவிர்க்க என பொய்யான காரணம் கூறப்படுகிறது. ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிராக செயல்படும் சுங்கச்சாவடி நிர்வாகத்துக்காக அரசு அலுவலர்கள், போலீஸார் துணைபோவதுதான் வேதனையாக உள்ளது. சாலை அமைப்பு தொடர்ந்தால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT