Published : 02 Jul 2024 06:01 PM
Last Updated : 02 Jul 2024 06:01 PM

தமிழக நெடுஞ்சாலைத் துறையில் ‘செல்வாக்கு’ உள்ளவர்களுக்கே பணியிட மாறுதல்: ஊழியர்கள் குற்றச்சாட்டு

மதுரை: நெடுஞ்சாலைத் துறையில் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே பணியிட மாறுதல் வழங்குவதாகவும், முதல்வர் தலையிட்டு தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்தப்போவாகவும் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பட்டய பொறியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் மு.மாரிமுத்து கூறியதாவது: ''நெடுஞ்சாலைத் துறையில் கட்டுமானம், பராமரிப்பு, திட்டம் வடிவமைப்பு மற்றும் ஆய்வு, தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள், நபார்டு மற்றும் கிராமச் சாலைகள், தொழிற்தட சாலை திட்டம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம், தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், நெடுஞ்சாலைகள் ஆராய்ச்சி நிலையம் மற்றும் சென்னை பெருநகரம் ஆகிய உட்பிரிவு துறைகள்(அலகுகள்) உள்ளன.

இதில், பணியாற்றும் உதவிக்கோட்டப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் ஆகியோருக்கு பல ஆண்டுகளாக பொது பணியிட மாறுதல் வழங்கப்படாமல் உள்ளது. செல்வாக்கு உள்ளவர்கள் மட்டும் பணியிமாறுதல் பெற்று வரக்கூடிய நிலை உள்ளது. பொதுவாக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் விதிப்படி உயர் அலுவலர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேல் அதே இடத்தில் பணிபுரிய அனுமதி வழங்கக்கூடாது.

மேலும், நெடுஞ்சாலைத் துறையில் இயக்கி வரும் 12 அலகுகளில் பணியிட நிரவல் மாறி மாறி வர வரவேண்டும். ஆனால், ஒரே அலகுகளில் பல ஆண்டுகளாக இடத்தை மட்டும் மாற்றி பல பொறியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதுசம்பந்தமாக அமைச்சர், தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அதற்கு, பிரச்சினையைத் திசை திருப்பும் நோக்கில் பதில் அளிக்கபட்டது. எனவே, முதல்வர் நெடுஞ்சாலைத்துறையில் உதவிக்கோட்ட பொறியாளர், உதவிப்பொறியாளர், இளநிலை பொறியாளர் ஆகியோருக்கு பொது பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும். எதிர்காலத்தில் பொது பணியிட மாறுதல் இல்லாத பட்சத்தில் பொறியாளர்கள் போராடுவதை தவிர வேறு வழியில்லை'' என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x