Published : 01 Jul 2024 06:58 PM
Last Updated : 01 Jul 2024 06:58 PM
சென்னை: கல்வராயன் மலை பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலும் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமீபத்தில் கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் பலியாகினர். கள்ளச் சாராயம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் காய்ச்சப்படுவதாக தகவல் வெளியான நிலையில், இந்தச் சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான தமிழ்மணி சில தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்து இருந்தார். அதில், கல்வராயன் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுகின்றனர். தமிழக அரசும் அவர்களின் மறுவாழ்வுக்காக எந்தவொரு திட்டங்களையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை, என கருத்து தெரிவித்திருந்தார்.
மூத்த வழக்கறிஞர் தமிழ்மணியின் இந்த கருத்தின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கல்வராயன் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், “கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் நாங்கள் அந்த விவகாரத்துக்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால், மூத்த வழக்கறிஞரான தமிழ்மணி, கல்வராயன் மலையை ஒட்டியுள்ள கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்ட பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்வராயன் மலைப்பகுதியில் வசிப்பவர்கள் கடந்த 1996-ம் ஆண்டு தான் தங்களது வாக்குரிமையை பதிவு செய்துள்ளனர் என்பது ஆச்சரியமளிக்கிறது. கடந்த 1976-ம் ஆண்டு வரை இப்பகுதி மக்களுக்கு எந்தவொரு அரசின் சலுகைகளும் கிடைக்கவில்லை என்பது அதிர்ச்சி கலந்த உண்மை. இதனால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி வாழ்வாதாரத்துக்காக செம்மரம், கள்ளச் சாராயம் என இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போய் உள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்கும் நிம்மதியாக உயிர்வாழ அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென அரசியலமைப்பு சாசனம் கூறுகிறது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. எனவே கல்வராயன் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட வாழ்வாதார அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
குறிப்பாக அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கைகளை கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். எனவே தாமாக முன்வந்து எடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலர், மலைவாழ் மக்கள் நலத்துறை செயலர், மத்திய உள்துறைச் செயலர், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம்” எனக் கூறி இந்த வழக்கை ஒப்புதலுக்காக பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT