Published : 01 Jul 2024 05:05 PM
Last Updated : 01 Jul 2024 05:05 PM
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகின்ற 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திமுக சார்பில் விக்கிரவாண்டி அமைக்கப்பட்ட தேர்தல் பணிக்குழுவில் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி, அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செஞ்சி மஸ்தான், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட 25 அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமணன் ஆகியோர் தொகுதிக்கான ஒன்றியப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கீழே ஒவ்வொரு கிராமத்தில் 2 வீதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்று பிரிக்கப்பட்டு, அங்குள்ள வாக்காளர்களின் தேவையை நிறைவேற்றி வருகின்றனர். மேலும் அமைச்சர்களின் பிரச்சாரம் பலனிக்கிறது.
பாமக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாநில, மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் தங்கி பிரச்சாரம் செய்துகொண்டே திமுகவினர் எப்படி பிரச்சாரம் செய்கிறார்கள் என்று கண்காணித்து தலைமைக்கு சொல்வதன் மூலம் பிரச்சார வியூகம் மாற்றப்பட்டுள்ளது. மதுவின் தீமைகளை எடுத்துக் கூறி பெண்களின் வாக்காளர்களை மொத்தமாக பெற்றிடவும், போட்டியிடும் வாக்காளர்களுக்கு வாக்குகளை பிரித்தளிக்காமல் மொத்தமாக பாமகவுக்கு அளிக்கவேண்டும் என ராமதாஸ், அன்புமணி, சௌமியா ஆகியோர் தீவிரமாக வாக்கு சேகரிக்கின்றனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் முதல் தலைமுறைப் பட்டதாரிகள், இளம் வாக்காளர்களை குறிவைத்து கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்துவருகின்றனர். இதன்மூலம் கூடுதல் வாக்குகளை பெற தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்கள். மேலும் நாள்தோறும் கட்சியின் ஒருங்கிணப்பாளர் சீமான் கிராமங்களில் பிரச்சாரம் செய்துவருகிறார். பாமக எங்கெல்லாம் எழுச்சியாக உள்ளதாக தகவல்கள் கிடைக்கிறதோ அங்கு கூடுதலாக திமுகவினர் களப்பணியாற்றி வருகின்றனர். அதேபோல பலவீனமாக உள்ள காணை ஒன்றியத்தில் பாமகவினரும், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் திமுகவினரும் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.
இரண்டாம்கட்ட பிரச்சாரத்தை துவக்கியுள்ள திமுக தாழ்த்தப்பட்ட மக்களையும், பெண்களை பாமகவும், இளைஞர்களை நாம் தமிழர்கள் கட்சி இலக்காகக் கொண்டு களப்பணியாற்றி வருகின்றனர். பிரச்சாரத்தை துவக்கியபோது திமுகவுக்கு இருந்த வாக்குகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியுள்ளது. மொத்தத்தில் சாதனை சொல்லி திமுகவும், வேதனைகளை சொல்லி பாமகவும், நாளை சாதிப்போம் என்ற நம்பிக்கையை விதைத்து நாம் தமிழர் கட்சியும் களப்பணியில் உள்ளனர். அதிமுக, தேமுதிக வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க உள்ளனர் என்பதை பொறுத்தே வெற்றி யாருக்கு என்பது தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT