Published : 01 Jul 2024 03:12 PM
Last Updated : 01 Jul 2024 03:12 PM

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர்கள் போராட்டம் தேவையற்றது: ஹெச்.ராஜா

திருவாரூர்: “மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தேவையற்றது. வன்மையாக கண்டிக்கத்தக்கது” என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

திருவாரூர், நாகை புறவழிச்சாலையில் உள்ள தனியார் கூட்டரங்கில், பாஜக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ''தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் எல்லா விதத்திலும் தோற்றுப் போன அரசாக தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுக அரசு உள்ளது. தமிழகத்தில் கள்ளுக்கடையைத் திறந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். கள்ளக்குறிச்சியில் 65 பேருக்கு மேல் விஷச் சாராயம் குடித்து இறந்துள்ளனர். இதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளபடியே வெட்கப்படணும், முதலில் செய்யவேண்டிய பணி என்ன, இளைஞர்களை சீர்படுத்த வேண்டும். இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டுக்கு சாபக்கேடு இந்த திராவிட இயக்கங்கள்.

முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சிகளே தமிழகத்தில் இருக்கக் கூடாது என நினைக்கிறார். மக்களவையில், இந்தியா கூட்டணி உறுப்பினர்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு சபா நடத்துகிறோமா? இல்லை. ஆனால் தமிழகத்தில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளியேற்றப்படுகின்றன. இதை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும்.

மேலும், இஸ்லாமிய பயங்கரவாதம் மிகப் பெரிய அளவில் தமிழகத்தில் வேரூன்றி உள்ளது. நேற்று என்.ஐ.ஏ 10 இடங்களில் சோதனை நடத்தியதில் இரண்டு நபர்கள் பயங்கரவாதிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். எந்த விதத்திலும் முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் அவரது கட்சியில் உள்ளவர்கள் இல்லை. அதுபோல் ஆட்சியும் முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை.

சட்டமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சியினரை வெளியேற்றுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் உடனடியாக எல்லாவிதமான போதைப் பொருட்களும் தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும். சாராயமாக இருந்தாலும், விஷ சாராயமாக இருந்தாலும் திமுகவினர்தான் என்பது தெரிகின்றது. இதில், மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு தான் நன்றி சொல்லணும். நாங்க சாராயக் கடையிலேயே போலியாத்தான் விற்கிறோம் என பேசுகிறார். அவரை நான் பாராட்டுகிறேன். திமுகவின் அவலங்களை வெளிப்படையாக எடுத்துச் சொல்லுகிற ஒரு அமைச்சராக இருக்கிறார். எல்லா விதத்திலும் தோற்றுப்போன அரசாங்கத்துக்கு தலைமை தாங்குவதை விட ஸ்டாலின் ராஜினாமா செய்வது கவுரவம்” என்றார்.

புதிய குற்றவியல் சட்டத்துக்கு வழக்கறிஞர்கள் போராடி வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஹெச்.ராஜா, “இதை வன்மையாக கண்டிக்கிறேன். மக்களவையில் இயற்றப்பட்ட சட்டத்தை மாநில அரசும் ஏற்றுக் கொண்டு விட்ட பிறகு, இவர்கள் எதற்காக போராடுகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களுக்கு விடுமுறை வேண்டும் என்பதற்காக போராடலாமா? இந்தப் போராட்டம் தேவையற்றது. வழக்கறிஞர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்'' என்றார்.

இந்தக் கூட்டத்தில் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதியிலிருந்து, மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x