Last Updated : 02 May, 2018 09:51 AM

 

Published : 02 May 2018 09:51 AM
Last Updated : 02 May 2018 09:51 AM

வங்கி பரிவர்த்தனைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாதந்தோறும் 2 சிறப்பு முகாம்கள்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

வங்கி மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் கடன் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாதம்தோறும் குறைந்தபட்சம் 2 சிறப்பு முகாம்களை நடத்துமாறு வங்கிகளை மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசு பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிமுகப்படுத்திய பிறகு, வங்கி பரிவர்த்தனைகள் அனைத்தையும் மின்னணு (டிஜிட்டல்) முறையில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பணப் பரிவர்த்தனையை குறைப்பதோடு, அனைத்து பரிவர்த்தனைகளையும் கணக்கில் கொண்டு வர இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், முறைகேடுகளை தடுக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களை பெறுவது குறித்து வாடிக்கையாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. குறிப்பாக, தற்போது வங்கிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்னணு பரிவர்த்தனைகள் எவ்வாறு செய்ய வேண்டும் என அவர்களுக்குத் தெரியவில்லை. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பல்லவன் கிராம வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி ஆகியவை நிதி கல்வி மற்றும் கடன் ஆலோசனை மையத்தை நிறுவியுள்ளன. இதற்காக, தமிழகம் முழுவதும் 62 கல்வி மையங்கள் உள்ளன.

இவற்றின் மூலம், மாதம்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த முகாம் சரியாக நடத்தப்படாததால் மத்திய ரிசர்வ் வங்கி அண்மையில் ஓர் சுற்றறிக்கையை அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ளது. அதில், நிதி கல்வி மையங்கள் மூலம், மாதத்துக்கு 2 சிறப்பு முகாம்கள் கண்டிப்பாக நடத்த வேண்டும்.

விவசாயிகள், குறு, சிறு மற்றும் குறு தொழில்முனைவோர்கள் ஆகியோருக்காக தனித்தனியாகவும் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x