Published : 01 Jul 2024 06:39 AM
Last Updated : 01 Jul 2024 06:39 AM

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: எல்.முருகன் வலியுறுத்தல்

சென்னை: தொழில் முதலீடுகள் தொடர்பான முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, திருவல்லிக்கேணியில் பிரதமரின் மனதின் குரல் ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அருகிலேயே பெங்களூரு விமான நிலையம் அமைந்திருக்கும் நிலையில் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது சாத்தியமா என்பது குறித்து மேலும் ஆராய வேண்டும்.

ஏற்கெனவே முதல்வர் ஸ்பெயின் பயணம் மேற்கொண்டார். அதில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதற்கு முந்தைய பயணத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளும் வந்து சேரவில்லை. திமுக ஆட்சி அமைந்த பிறகு இங்கிருந்த நிறுவனங்கள் கூட மூடிவிட்டு, வெளிநாடு சென்றது தான் நடந்திருக்கிறது.

முதல்வர் எதற்காக அமெரிக்காவுக்கு செல்கிறார், எத்தனைநிறுவனங்களின் முதலீடுகளை தமிழகத்துக்குக் கொண்டு வருகிறார் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு பயப்படுகிறது. இதில் திமுக நிர்வாகிகள் சம்பந்தப்பட்டிருப்பார்களோ அல்லது தமிழக அரசு செயலற்ற தன்மை வெளிவந்துவிடும் என்ற அச்சம் இருக்கிறது. 30-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் உயிரிழந்த நிலையில், தேசிய பட்டியலின ஆணையம், மகளிர் ஆணையம் போன்றவை விசாரணை மேற்கொண்டுள்ளன.

கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ வசம் விசாரணையை தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும். மரக்காண கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை நீண்டுகொண்டே இருக்கிறது. தமிழகத்தில் எங்கும் கள்ளச்சாராயம் கிடைக்கிறது. இதற்கு முழு பொறுப்பு திமுக அரசும், முதல்வரும் தான்.

காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் முழுப்பொறுப்பேற்க வேண்டும். சம் பந்தப்பட்ட துறையின் அமைச்சர் பதவி விலக வேண்டும். டாஸ்மாக் மதுவில் கிக் இல்லைஎன அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பது மக்களை கேலிக்கூத்து போல பாவிப்பதாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்வில், மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம், அறிவுசார் பிரிவு மாநில தலைவர் ஷெல்வி, மாவட்டத் தலைவர் விஜய் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x