Published : 01 Jul 2024 05:37 AM
Last Updated : 01 Jul 2024 05:37 AM
சென்னை: சென்னையில் இருந்து மகாபலிபுரம் வழியாக கடலூர் வரை புதிய ரயில் பாதை திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்காததால், இத்திட்டம் பல ஆண்டுகளாக முடங்கி இருக்கிறது. எனவே, இத்திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி, விரைவாக செயல்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் இருந்து கடலோரப் பகுதிகள் வழியாக ரயில் பாதை அமைத்தால், போக்குவரத்து நெரிசல் குறையும். அந்தவகையில், சென்னையில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக கடலூர் வரை 179 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்க கடந்த 2007-ம் ஆண்டு ரயில்வே துறை ஒப்புதல் அளித்தது.
இதற்கான ஆரம்ப கட்ட சர்வே பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன்பிறகு, இத்திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்ததால், திட்ட மதிப்பீடு ரூ.1,500 கோடியை தாண்டியது. கடந்த மத்திய பட்ஜெட்டிலும் ரூ.50 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதனால், பெரிய அளவில் பணிகள் நடக்கவில்லை. எனவே, இத்திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி விரைவாக செயல்படுத்த ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலூர் வழியாக புதிய ரயில்பாதை திட்டத்தைச் செயல்படுத்த ரயில்வே அறிவித்து, பல ஆண்டுகள் ஆகியும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை.
தமிழகம், புதுச்சேரிக்கு முக்கிய ரயில் பாதை திட்டமாக இது உள்ளது. எனவே, வரும் மத்திய பட்ஜெட்டில், இந்த திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, விரைவாகச் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை - கடலூர் (வழி: மகாபலிபுரம், புதுச்சேரி) ரயில் திட்டத்துக்கு அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கும் நிதியை கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். வரும் பட்ஜெட்டிடல் இத்திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி வலியுறுத்தி இருக்கிறோம்'’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT