Published : 01 Jul 2024 05:40 AM
Last Updated : 01 Jul 2024 05:40 AM

இரு மெட்ரோ ரயில் வழித்தடங்கள் நீட்டிப்பு தொடர்பாக ஆய்வு

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இடம்பெறும் 4 மற்றும் 5- வது வழித்தடங்களை நீட்டிப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புக்கு முன்பாக, ஆய்வு செய்யும் பணி நடைபெறுகிறது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படுகின்றன. தற்போது, 45-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டப்பாதை பணி, சுரங்கப்பாதை பணி, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி உள்பட பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தையும் வரும் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புறநகர் பகுதிகளை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தை பரந்தூர் வரை (43 கி.மீ.) நீட்டிப்பது, மாதவரத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித் தடத்தை கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை (16 கி.மீ.) நீட்டிப்பது தொடர்பாக சாத்தியகூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த 2 வழித்தடங்களை நீட்டிப்பது தொடர்பாக தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. மேலும், இவற்றை நீட்டிப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு கடந்த பிப்ரவரியில் அனுமதி அளித்தது.

இந்நிலையில், இந்த 2 வழித்தடங்களில் விரிவான திட்டஅறிக்கை தயாரிப்பதற்கு முன்பாக, ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: 2 வழித்தடங்களையும் நீட்டிக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, 2 வழித்தடங்களில் விரிவான திட்ட அறிக்கைதயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சுரங்கப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் வடிவமைப்பு, ரயில்நிலைய அமைவிடங்கள், பயணிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்கள் செய்யப்படும். அதன்பிறகு, விரிவான திட்டஅறிக்கை தயாரித்து, இறுதி செய்து, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பூந்தமல்லி – போரூர் இடையே தண்டவாள பணி தீவிரம்: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி பைபாஸ் – போரூர் இடையே மெட்ரோ ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது, இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரை 26.1 கி.மீ. வரையிலான 4-வது வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப் பாதையாகவும் அமைகிறது.

உயர்மட்டப் பாதை அமைக்கப்பட்டுள்ள குமணஞ்சாவடி, காட்டுப்பாக்கம், ஐய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ ரயிலுக்கான தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லி பைபாஸ் – போரூர் இடையே மெட்ரோ ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடையும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x