Published : 01 Jul 2024 06:00 AM
Last Updated : 01 Jul 2024 06:00 AM

ஏழைகள் உயிர் திமுகவுக்கு இளக்காரமா? - கே.பி.பார்க் விவகாரத்தை சுட்டிக்காட்டி அண்ணாமலை கேள்வி

சென்னை: சென்னை கே.பி.பார்க் குடியிருப்பில் உள்ள லிஃப்டில் இருந்து ஒருவர் விழுந்து இறந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, ஏழை மக்களின் உயிர் என்றால் திமுகவுக்கு இளக்காரமா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்விஎழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்ட் கோளாறு காரணமாக, 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கணேசன் என்ற நபர் உயிரிழந்திருக்கிறார். ஏழை, எளிய மக்களுக்காகக் கட்டப்பட்ட இந்தகே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு, தரமற்ற முறையில் கட்டப்பட்ட விவரங்கள் ஐஐடி ஆய்வுக் குழு அறிக்கையின் மூலம் தெரியவந்தது.

இதையடுத்து, இந்த குடியிருப்பைக் கட்டிய பிஎஸ்டி கட்டுமான நிறுவனம், அரசுப் பணிகளில் பங்கேற்க முடியாதவாறு கருப்புப் பட்டியலில் வைக்கப்படும் என்று திமுக அரசு கூறியது. தரமற்ற குடியிருப்புகளைக் கட்டிய அந்த நிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால் கடந்த ஆண்டு, சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.250 கோடி மதிப்பிலான நிதிநுட்ப நகரம் அமைக்க மீண்டும் இதே நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியது திமுக அரசு.

இதுகுறித்து, கடந்த 2023-ம்ஆண்டு ஜூன் 19-ம் தேதி கேள்விஎழுப்பியிருந்தோம். அதற்குப் பதிலளித்த திமுக அரசு, முறையான டெண்டர் வழியேதான் அந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தது. கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனம் எப்படி அரசு ஒப்பந்தத்தில் பங்கேற்றது என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

தற்போது, லிஃப்ட் கோளாறு காரணமாக ஒருஉயிர் பறிபோயிருக்கிறது. ஐஐடி ஆய்வறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தரக்குறைவான கட்டிடங்கள் கட்டும் நிறுவனத்துக்கே மீண்டும் மீண்டும் அரசுப் பணிகள் வழங்கி வரும் திமுக அரசே இதற்கு முழு பொறுப்பு.

ஏழை எளிய மக்களின் உயிர்என்றால் திமுகவுக்கு அத்தனை இளக்காரமாகி விட்டதா? உடனடியாக, இந்தக் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

தரமற்ற கட்டிடங்கள் கட்டி வரும் நிறுவனம் மீதும், மீண்டும் மீண்டும் அரசுப் பணிகளை இந்த நிறுவனத்துக்கு வழங்கி வரும் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x