Published : 31 May 2018 09:27 AM
Last Updated : 31 May 2018 09:27 AM
குளிர்ச்சி இல்லாத ஏசி ரயில் பெட்டிகளில் பயணிகள் தவிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. வெப்பம் தாளாமல் ரயில் நிலையத்தில் இறங்கி பயணிகள் போராட்டம் நடத்திய சம்பவமும் உண்டு. இப்படி பயணிகள் அவதிப் படுவது ஏன்? என்று விசாரித்த போது அதிர்ச்சியான பல தகவல் கள் கிடைத்தன.
ரயில் பெட்டிகளில் சராசரியாக இரண்டு 2-ம் வகுப்பு ஏசி பெட்டி களும், மூன்று 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகளும் இருக்கும். நீலகிரி, ராமேஸ்வரம் போன்ற ரயில்களில் முதல் வகுப்பு ஏசி பெட்டிகளும் இருக்கின்றன. ஏசி பெட்டிகளில் போதிய குளிர்ச்சி இல்லை என்று பயணிகள் ஆதங்கப்படுகின்றனர். அதுவும் இப்போது கோடைகாலம் என்பதால் இப் பிரச்சினைகள் ஏறக்குறைய எல்லா ரயில்களிலுமே இருக்கின்றன. இதனால் பயணிகளின் தவிப்பு சொல்லிமாளாது.
இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முழு அளவில் சார்ஜ் இல்லை
‘‘ரயில்வே யார்டில் ஏசி பெட்டிகளுக்கு ‘சார்ஜ்’ போடுவதில்லை. ரயில் நிலைய நடைமேடைகளில்தான் சார்ஜ் போடப்படுகிறது. பல ரயில்கள் இணைப்பு ரயில்களாக இருப்பதால், குறைந்த நேரமே ரயில் நிலைய நடை மேடைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். ஈரோட்டில் இருந்து சென்னை வரும் ஏற்காடு எக்ஸ்பிரஸ், பின்னர் ஹைதராபாத் செல்கிறது. அதுபோல கன்னியாகுமரி யில் இருந்து சென்னை வரும் எக்ஸ்பிரஸ், பின்னர் பெங்களூரு செல்கிறது. இதுபோன்ற ரயில் கள் குறைந்த நேரமே நடை மேடையில் நிறுத்தி வைக்கப்படுவதால் முழு அளவில் ஏசி பெட்டிகளுக்கு சார்ஜ் போட முடிவ தில்லை.
ஒவ்வொரு ஏசி பெட்டியிலும் 1,100 ஆம்பியர் /ஹவர் திறன் கொண்ட பேட்டரிகள் இருக்கும். அந்த பேட்டரி 100 வோல்ட்டுக்கு கீழே வந்துவிட்டால், ஏசி இயங்காது. அதுபோன்ற நேரத்தில் சுமார் 6 முதல் 7 மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும். பேட்டரியில் 115 முதல் 118 வரை வோல்ட் வரை இருக்க வேண்டும். எந்தப் பெட்டியில் வோல்ட் குறைவாக இருக்கிறதோ அந்த பெட்டிக்கு மட்டும் சார்ஜ் போடப்படும். ஒரே நேரத்தில் சார்ஜ் போட்டுக் கொண்டே, ஏசி யூனிட்டையும் இயக்குவதால் எதிர்பார்த்த அளவுக்கு சார்ஜ் ஆகாது. அதனால் போதிய குளிர்ச்சி இருப்பதில்லை. எனவேதான் பயணிகள் அவதிப்பட நேரிடுகிறது. ரயில் புறப்பட்டுச் செல்லும்போது பேட் டரி சார்ஜ் ஆகி போதிய குளிர்ச்சி கிடைக்கும். அதுவரை பயணிகளின் சிரமத்தைக் குறைக்க வழியில்லாத நிலை நீடிக்கிறது.
கம்ப்ரசர்கள் பற்றாக்குறை
நடைமேடையில் ஏசி பெட்டி களுக்கு சார்ஜ் போடுவதற்கு 4 கம்ப்ரசர்கள் மட்டும் உள்ளன. 4 ஏசி பெட்டிகள் உள்ள ரயில் களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், 6 ஏசி பெட்டிகள் உள்ள ரயில்களுக்கு முழுமையாக ஏசி சார்ஜ் செய்ய முடிவதில்லை. ஒரேநேரத்தில் 5-க்கும் மேற்பட்ட நடைமேடைகளில் இருக்கும் ரயில்களின் ஏசி பெட்டிகளுக்கு சார்ஜ் போட்டால் மின் உபயோகம் திடீரென அதிகரித்து டிரான்ஸ்பார்மர் பழுதாகிவிடும். அதனால்தான் எந்த ஏசி பெட்டி யில் சார்ஜ் மிகக் குறைவாக இருக்கிறதோ அதற்கு மட்டும் தான் சார்ஜ் போடப்படுகிறது.
97124 என்ற எண் கொண்ட பெட்டி 1997-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகும். இதுபோல பழைய பெட்டியாக இருந்தால் குளிர்ச்சி குறைவாகவே இருக்கும். பராமரிப்புக் குறைவும் ஒரு காரணம். இதுபோன்ற பல்வேறு காரணங்களால்தான் ஏசி பெட்டிகளில் குளிர்ச்சி இருப்பதில்லை.’’
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
மேலும், ரயில்வே தொழில்நுட்பப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
‘‘தற்போது நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள எண்ட் ஆன் ஜெனரேஷன் ஏசி பெட்டிகளில் (End on Generation Coaches) குளிர்ச்சி இல்லை என்ற பிரச்சினை வருவதில்லை. ஏனென்றால், ரயிலின் என்ஜின் பக்கமும், கடைசி பெட்டியிலும் பிரம்மாண்டமான ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கும். அதிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தில் அனைத்து பெட்டிகளிலும் ஏசி யூனிட் இயங்குவதால் குளிர்ச்சி சீராக இருக்கும்.
இதுபோன்ற ஏசி பெட்டிகள் கோவை சதாப்தி, மைசூர் சதாப்தி, மங்களூர் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், பெங்களூர் டபுள்டக்கர் ஆகிய ரயில்களில் உள்ளன.
தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் மொத்த ரயில்களில் 20 சதவீதம் ரயில்களில் மட்டும்தான் இந்த பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ரயில்களிலும் இதுபோன்ற பெட்டிகளை இணைத்தால் மட்டுமே குளிர்ச்சி பிரச்சினை முடிவுக்கு வரும்.’’
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT