Published : 30 Jun 2024 06:58 PM
Last Updated : 30 Jun 2024 06:58 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க 562 கிராம அளவிலான கண்காணிப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி நகரில் ஜூன் 18-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் விற்பனை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 21 பேரை சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை முற்றிலும் அழிக்கும் விதமாக, கிராம நிர்வாக அலுவலரை தலைவராகக் கொண்ட குழுவில் கிராம உதவியாளர், ஊராட்சி அளவிலான மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர், அங்கன்வாடி பணியாளர், கிராமத்தின் ரோந்து பணி காவலர் மற்றும் பெண் சுகாதார தன்னார்வலர் ஆகியோரை உறுப்பினர்களாக நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.
இக்குழுவின் உறுப்பினர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட கிராமப் பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுதல், பதுக்கி வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் கடத்துதல் ஆகியவற்றைக் கண்டறிந்து அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது காவல்துறை மூலம் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்களான கஞ்சா, குட்கா, பான்மசாலா மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் காவல்துறை மூலம் உரிய குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT