Published : 30 Jun 2024 05:19 PM
Last Updated : 30 Jun 2024 05:19 PM

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவு: சிபிஐ

முத்தரசன்

சென்னை: "புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்த வேண்டும். இந்தச் சட்டங்களை செயல்படுத்தக்கூடாது. இவற்றை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்தும் தொடர் போராட்டங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவை தெரிவிக்கிறது என அக்கட்சி அறிவித்துள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நடைமுறையில் உள்ள, இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளை மக்களுக்கு விரோதமான முறையில் ஒன்றிய அரசு மாற்றியமைத்து, புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

இவற்றுக்கு, வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியில் பெயரிட்டு, அதே மொழி தலைப்புகளைத் தான் இந்தியா முழுமையும் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. ஜூலை 1ம் தேதியிலிருந்து இச்சட்டங்களை செயல்படுத்துவதென அறிவித்துள்ளது. இது பற்றி விவாதித்த, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு “இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 348-க்கு எதிரான நடவடிக்கை ஆகும். இதனை உடனடியாக நிறுத்தி வைத்து, முழுமையாக திரும்பப் பெற வேண்டும்” என்று ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இதனை வலியுறுத்தி, 01.07.2024-ஐ கருப்பு தினமாக அனுசரித்து, நீதிமன்றங்களின் வாயில்களில் உண்ணாவிரதம் இருப்பது என்றும், அன்று முதல் ஒரு வாரத்துக்கு மாநிலம் தழுவிய அளவில் நீதிமன்றப் பணியிலிருந்து விலகி இருப்பது என்றும், ஜூலை 2ல் நீதிமன்றங்கள் முன்பும், ஜூலை 3ல் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும், திருச்சியில் ஜூலை 8ல் வழக்கறிஞர் பேரணியை நடத்தவும் முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, ஒன்றிய அரசு தன்னிச்சையாக இந்தச் சட்டங்களை நிறைவேற்றியது. இந்தச் சட்டங்களை செயல்படுத்தக்கூடாது என்றும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரி, வழக்கறிஞர்கள் நடத்தும் தொடர் போராட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது தனது முழு ஆதரவை தெரிவிக்கிறது, வெற்றி பெற வாழ்த்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x