Published : 30 Jun 2024 03:44 PM
Last Updated : 30 Jun 2024 03:44 PM
மதுரை: அழுகை அடங்கி சிரிப்பு சப்தம் கேட்கிறது! மருத்துவமனையா? அல்லது குழந்தைகள் ஓடியாடி விளையாடும் பூங்காவா? எனச் சொல்லுமளவுக்கு காண்போரை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு, வண்ணமயமாகவும், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய பூங்காவாகவும் அமைந்துள்ளது.
பொதுவாக தனியார் காப்பரேட் மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சைக்கு வரும் குழந்தைகளிடம் அச்சத்தைப்போக்கி குதூகலத்தை ஏற்படுத்தவும், பொதுமக்களை கவரவும் குழந்தைகள் சிகிச்சைப்பிரிவுகள் வண்ணமயமாகவும், குழந்தைகள் விளையாடும் உபகரணங்களுடனும் அமைக்கப்பட்டிருக்கும்.
இத்தகைய தனியார் மருத்துவமனைகளையும் மிஞ்சும் வகையில் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இக்கட்டிடத்தின் முன் பகுதியில் உள்ள சுவர் வானவில் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பலவிதமான கவலைகளோடு பதற்றத்துடன் சிகிச்சைக்கு வரும் பெற்றோர், அழுகுரலுடன் வர அடம்பிடிக்கும் குழந்தைகள் ஆகியோரின் மனங்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக இது அமைந்துள்ளது.
சிகிச்சைக்காக வரும் குழந்தைகள் விளையாடுவதற்கு நுழைவாயிலில் குழந்தைகளுக்கென பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் விளையாடும் பிஞ்சு குழந்தைகளின் பேச்சும், சிரிப்பும் சிகிச்சையில் இருக்கும் உணர்வையும், மிரட்சியையும் குறைப்பதாக உள்ளது. சிகிச்சைப்பிரிவுக்கு வெளியே சிகிச்சைக்கு வருவோருக்கு கழிவறை வசதியுடன் காத்திருப்பு இடம், மின்விசிறி, இருக்கைகள், மொபைல் சார்ஜிங் பாயிண்டுகளுடன் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
சிகிச்சைப்பிரிவு உள்ளே நுழைந்தவுடன் ‘யுனிசெப்’(UNICEF) உடைய 75ம் ஆண்டு நிறைவை நினைவு கூறும் விதமாக அதன் 17 குறிக்கோள்களையும் உள்ளடக்கிய ஓவியம் வரையப்பட்டுள்ளது. சிகிச்சைப்பிரிவு முழுவதுமே இதுபோன்ற தனித்துவமான ஓவியங்கள் பரவசப்படுத்துகின்றன. அதில், வானவில் வண்ணங்களுக்கு நடுவில் ஒரு கைக்குழந்தை தூங்குவது போன்ற ஓவியம் ஒன்று அனைவரையும் ஈர்க்கிறது. சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையம் எப்படி இருக்குமோ அப்படியே இந்த பிரிவு இருப்பதாக தோன்றுகிறது.
இரவை பகலாக்கும் பிரகாசமான மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சிகிச்சைப்பிரிவின் பின்புறம் புதர்மண்டி அசுத்தமாக இருந்ததை சுத்தப்படுத்தி இருக்கைகள் அமைத்து குழந்தைகள் துணிகளை உலர்த்த கயிறுகள் கட்டப்பட்டு மிகவும் தூய்மையாக மாற்றப்பட்டுள்ளது. சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை போன்ற வண்ண குப்பைக்கூடைகள் வைத்து அன்றாடம் மருத்துவக்கழிவுகள் தரம்பிரித்து மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
தாய்மார்கள் பால் கொடுக்கும் அறை, பொருட்கள் வைக்கும் அறை உள்ளன. 24 மணி நேரமும் பார்வையாளர்களை கண்காணிக்கவும், சட்டவிரோத செயல்களை தடுக்கவும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு உள்ளது. சிகிச்சைப்பிரிவுகளை அடையாளம் காணவும், வழிகாட்டவும் மருத்துவ அறைகள் முழுவதும் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
சிகிச்சைப்பெறுவோருக்கு மூன்று வேளை உணவு மற்றும் பலகாரங்களுடன் பட்டியல் போட்டு நேரத்திற்கு வழங்கப்படுகிறது. சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு மிக முக்கியமான ஒன்று நேர்மறை எண்ணம். 'நான் குணமாக வேண்டும் அல்லது நான் குணமாகிவிடுவேன்' என்பது. அந்த எண்ணத்தை ஏற்படுத்தவே, குழந்தைகள் சிகிச்சைப்பிரிவை, பிரமாண்டமாக உருமாற்றியுள்ளோம் என்கிறார்கள், அதன் மருத்துவர்கள். மருத்துவமனை வளாகம், தூர்நாற்றம், மருந்து நெடி வராமல் மிகத் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது.
தாயின் மடியில் தவழ்ந்து விளையாடும் நேரத்தில் தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்குவதாலே குழந்தைகள் மிரட்டியுடன் நொடிக்கு நொடி பதற்றத்துடன் காணப்படுகின்றன. அதை யோசித்த மருத்துவர்கள், தாயின் அரவணைப்பிலே குழந்தைகள் சிகிச்சைப்பெறும் வகையில், அதன் படுக்கைக்கு அருகிலேயே பெற்றோர்களுக்கான படுக்கையும் அமைத்துக் கெடுத்துள்ளனர். எந்த மருத்துவப் பரிசோதனைக்கும் குழந்தைகளை தூக்கிகொண்டு முன்போல் திரிய வேண்டியதில்லை.
அதி நவீன பரிசோதனை கருவிகளுடன் மருத்துவர்கள் தேடி வந்து சிகிச்சை வழங்குகிறார்கள். குழந்தைகள் வீட்டில் இருப்பது போன்ற உணர்வுடனே அவர்கள் இங்கே தங்கி சிகிச்சை பெறும் வகையில், இந்த சிகிச்சை பிரிவு வடிவமைக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் பிரிவு இயக்குனர் டாக்டர். நந்தினி குப்புசாமி பெருமித்துடன் தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘தென் தமிழகம் முழுவதும் இருந்து பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இங்கு சிகிச்சைக்கு வருகிறார்கள். எந்த உயிர் காக்கும் சிகிச்சை இல்லை என்று சென்னைக்கு பரிந்துரை செய்யாமல், அனைத்து சிகிச்சைகளும் ஒரு பைசா செலவில்லாமல் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் வழங்குகிறோம். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் மருத்துமனை டீன் பங்கு முக்கியமானது.
இவர்கள் இன்றி நாங்கள் எதுவும் செய்திருக்க இயலாது. சிகிச்சைப்பிரிவுகள் குழந்தைகளுக்கான பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் பல மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் வருகின்றனர். மேலும், இங்குள்ள குழந்தைகளுக்கான ஐசியு பிரிவு ரூ.2 1/2 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT