Published : 30 Jun 2024 12:50 PM
Last Updated : 30 Jun 2024 12:50 PM
சென்னை: ஆவினிடம் பாடம் கற்றுக் கொண்ட கர்நாடக மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினி அசுர வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் ஆவினோ படு வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும், இனியாவது ஆவினும், தமிழ்நாடு அரசும் விழித்துக் கொள்ளுமா? என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கர்நாடக மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினி அம்மாநிலத்தில் உள்ள 24 ஆயிரம் கிராமங்களில் சுமார் 27லட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினசரி 85 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வந்த நிலையில் அங்கு பால் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியிருப்பதன் காரணமாக தினசரி பால் கொள்முதல் தற்போது 1 கோடி லிட்டர் என்கிற இமாலய இலக்கை எட்டி பால் கொள்முதல், பால் மற்றும் பால் சார்ந்த உபபொருட்களின் உற்பத்தி, விற்பனையில் புதியதொரு சகாப்தம் படைத்து தென்னிந்திய மாநிலங்களின் கூட்டுறவு பால் நிறுவனங்களுக்கு முன்மாதிரி நிறுவனமாக மாறியுள்ளது.
மேலும் பால் மற்றும் பால் சார்ந்த உபபொருட்களின் விற்பனை வணிகச் சந்தையில் சிறந்து விளங்கும் குஜராத் மாநிலத்தின் அமுல் நிறுவனத்தோடு போட்டி போட்டு அயல்நாடுகளிலும் பால், பால் சார்ந்த உபபொருட்களின் விற்பனையை சந்தைப்படுத்துதலில் சிறப்பான இலக்கை அடைந்து நடப்பு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு Sponsorship செய்கின்ற அளவிற்கு உயர்ந்துள்ள நந்தினி நிர்வாகத்தின் சீர்மிகு செயல்பாடுகளை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் மனதார பாராட்டுகிறது.
அதுமட்டுமின்றி கர்நாடக மாநிலத்தில் பால் கொள்முதல் அதிகரித்து வரும் நிலையில் நுகர்வோருக்கான பால் விற்பனையில் கடந்த சில தினங்களுக்கு முன் (26.06.2024) சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk), நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk), நிறைகொழுப்பு பால் (Full Gream Milk) உள்ளிட்ட 10 வகையான 500மிலி பாக்கெட் மற்றும் 1லிட்டர் பாக்கெட்டில் கூடுதலாக 50மிலி பாலின் அளவை அதிகரித்து, கூடுதலாக அடைக்கப்பட்ட பாலுக்கான விற்பனை விலையை பாக்கெட்டிற்கு 2.00ரூபாய் மட்டும் கூடுதலாக்கி இருப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்கிறது.
குறிப்பாக, கர்நாடகாவில் தினசரி 1.6 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகி வரும் நிலையில் 2000ம் ஆண்டில் நந்தினியின் தினசரி பால் கொள்முதல் சுமார் 18.8லட்சம் லிட்டராக இருந்த நிலையில் பின்னர் அது படிப்படியாக உயர்ந்து 2007ம் ஆண்டில் 29 லட்சம் லிட்டராக உயர்ந்தது. அதன் பிறகு அம்மாநில அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு 2.00ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்து கால்நடைத்துறை மூலம் விவசாய பெருமக்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தியதாலும், Rajanukunte, Gubbi, Dharwad, Hassan, Shikaripur, Arakalgud, KR Pete & Sadali உள்ளிட்ட இடங்களில் தொடங்கப்பட்ட கால்நடைகளுக்கான தீவன தொழிற்சாலையில் தினசரி 3250மெட்ரிக் டன் வரை தரமான கால்நடை தீவனங்கள் உற்பத்தி செய்து விவசாய பெருமக்களுக்கு மானிய விலையில் வழங்கியதாலும், பால் உற்பத்திக்கான செலவினங்களுக்கு ஏற்ப பால் கொள்முதல் விலையோடு ஊக்கத்தொகையையும் அவ்வப்போது உயர்த்தி வழங்கியதாலும் (தற்போது ஊக்கத்தொகை லிட்டருக்கு 6.00ரூபாய்) ஆண்டுக்கு ஆண்டு நந்தினிக்கான பால் கொள்முதல் 14% வளர்ச்சி கண்டு 2019ம் ஆண்டில் தினசரி பால் கொள்முதல் சுமார் 80 லட்சம் லிட்டராக உயர்ந்த சூழலில் அது தற்போது ஒரு கோடி லிட்டர் என்கிற இமாலய இலக்கை தொட்டிருப்பது பால் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் விவசாய பெருமக்கள் நலனில் அம்மாநில அரசும், நந்தினி நிர்வாகமும் எந்த அளவிற்கு மிகுந்த அக்கறையோடு, பொறுப்புணர்ச்சியோடு செயல்பட்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது.
மேலும் KMF என்று அழைக்கப்படும் கர்நாடகா பால் கூட்டமைப்பின் கீழ் கர்நாடகாவில் 24ஆயிரம் கிராமங்களில் உள்ள வெறும் 15 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களே செயல்பட்டு வந்தாலும் கூட அவற்றின் கீழ் சுமார் 15,757 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அதில் 4,294 பெண்கள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருவதும், சுமார் 12,823 தானியங்கி பால் சேகரிப்பு அலகுகள் (AMCUs) மூலம் 27 லட்சத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் 2091 மொத்த பால் குளிரூட்டும் நிலையங்களுக்கு (BMC) அனுப்பப்பட்டு, முறையாக குளிரூட்டல் மேற்கொள்ளப்பட்டு இந்த இமாலய சாதனையை நந்தினி நிர்வாகம் எட்டியிப்பது சிறப்பிற்குரியதாகும்.
ஏனெனில் சுமார் 20ஆண்டுகளுக்கு முன் பால் கொள்முதல் கட்டமைப்புகள் தொடர்பாக நந்தினி நிர்வாகத்தின் அதிகாரிகள் தமிழ்நாடு வருகை தந்து ஆவினில் உள்ள பால் கொள்முதல் கட்டமைப்புகள் தொடர்பாக பாடம் பயின்று சென்றவர்கள் இன்று ஆவின் நிர்வாகமும், தமிழக அரசும் நினைத்தால் கூட எட்ட முடியாத இமாலய இலக்கை தொட்டிருப்பதும், கோடிக்கணக்கான ரூபாய் மக்களின் வரிப்பணத்தை ஆண்டுதோறும் வீணடிக்கும் பால்வளத்துறைக்கு என்று கர்நாடகாவில் தனி அமைச்சகமோ, DR CSR, SI உள்ளிட்ட பல்வேறு பால்வளத்துறை அதிகாரிகளோ இல்லாமல், கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நந்தினி கர்நாடக மாநிலத்தில் சுமார் 70% பங்களிப்போடு தனியாரை வந்து பார் என்று மல்லுக்கட்டி அசுர வளர்ச்சி கண்டு வருகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் ஆவின் மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமாக இருந்தாலும் கூட மக்களின் கோடிக்கணக்கான ரூபாய் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில் ஆவினுக்கு என்றே தனி (பால்வளத்துறை) அமைச்சகம், அதற்கென ஒரு அமைச்சர், கணக்கிலடங்கா எண்ணற்ற அதிகாரிகள் இருந்தும் கூட பல ஆண்டுகளாக குறிப்பிட்ட அளவை தாண்டி பால் கொள்முதலிலும், பால், பால் சார்ந்த உபபொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையிலும் எந்த ஒரு முன்னேற்றமும், வளர்ச்சியும் இன்றி ஆண்டுக்காண்டு பால் கொள்முதல், பால் மற்றும் பால் சார்ந்த உபபொருட்களின் உற்பத்தி, விற்பனை, விநியோகத்தில் தனியாரோடு போட்டியிட முடியாமல் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதோடு, அதிகபட்சமாக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற "செஸ் ஒலிம்பியாட்" போட்டிக்கு ஆவின் பால் பாக்கெட்டுகளில் அதுகுறித்து விளம்பரம் செய்து (அதிலும் ஊழல் முறைகேடு) திருப்தி பட்டுக் கொண்ட தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினின் செயல்பாடுகளையும், கர்நாடகாவின் நந்தினியின் அபார வளர்ச்சி குறித்த செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மலைக்கும், மடுவிற்குமான வித்தியாசம் இருப்பதும், நந்தினிக்கு பாடம் கற்று தந்து விட்டு தற்போது படுபாதளத்தை நோக்கி ஆவின் நிர்வாகம் சென்று கும்பகர்ணன் போல் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருப்பதும் அத்துறை சார்ந்த எங்களுக்கு மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கிறது.
கிராம பொருளாதாரத்தை உயர்த்துவதிலும், விவசாய பெருமக்களுக்கான வாழ்வாதாரத்தின் ஒரு அங்கமாகவும் திகழும் பால் உற்பத்திக்கும், மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினின் முன்னேற்றத்திற்கும், மாநிலத்தில் பால் உற்பத்தியை பெருக்கவும் மத்திய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB), தேசிய விவசாய மேம்பாட்டுத் திட்டம் (NADP), தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம் (NPDD), Rastriya Gokul Mission மற்றும் NABARD மூலம் எண்ணற்ற நிதியுதவி கிடைத்தும் கூட அதனை தமிழ்நாடு அரசும், ஆவின் நிர்வாகமும் பயனுள்ள வகையில் பயன்படுத்தி ஆவினுக்கான பால் உற்பத்தி, கொள்முதலை அதிகரிக்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல், தேவையற்ற இயந்திர தளவாடங்கள் கொள்முதல், அளவிற்கு அதிகமான, தேவையற்ற பணி நியமனங்கள் செய்து பல நூறு கோடி ரூபாயை ஆண்டுதோறும் வீணடிப்பதும், மாதவரம், ஆம்பூர், மதுரையில் இருந்த கால்நடை தீவன தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்ட நிலையில் (மதுரையில் கால்நடை தீவன உற்பத்தி தொழிற்சாலை இருந்த இடத்தில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்கு சுமார் 13கோடி ரூபாய் சோலார் பேனல் அமைத்து அது செயல்படாமல் முறைகேடு) ஈரோட்டில் மட்டுமே செயல்பாட்டில் உள்ள தொழிற்சாலையில் வெறும் 300மெட்ரிக் டன் கால்நடை தீவன உற்பத்தி நடைபெற்று வருவதும், கால்நடை தீவனத்திற்கான மானியத்தை குறைத்ததும், பால் உற்பத்தியாளர்களுக்கு குறித்த காலத்தில் பால் கொள்முதலுக்கான தொகை பட்டுவாடா செய்யாமல் இருப்பதும், ஊழியர்களுக்கு அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வைக் கூட வழங்க முடியாமல் இருப்பதும், வெறும் விளம்பரத்தில் மட்டுமே ஆவின் மிகப்பெரிய வளர்ச்சியடைந்து வருவது போன்று போலியாக கட்டமைத்து வருவதும் மிகுந்த வருத்ததிற்குரியதாகும்.
"குருவை மிஞ்சிய சிஷ்யன்" போல ஆவினில் பால் கொள்முதலில் பாடம் கற்றுச் சென்ற நந்தினி நிர்வாகம் 19லட்சம் லிட்டரில் இருந்த தினசரி பால் கொள்முதலை 20ஆண்டுகளில் சுமார் 24லட்சத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களிடமிருந்து சுமார் 1கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்து வரும் நிலையில், நந்தினிக்கு பாடம் கற்றுத் தந்த ஆவினுக்கு 27மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் இருந்தும் சுமார் 9,189 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக தினசரி வெறும் 3.91லட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து சுமார் 28.30லட்சம் லிட்டர் முதல் 34லட்சம் லிட்டர் வரை மட்டுமே தற்போது பால் கொள்முதல் செய்து வருவது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையை நினைவூட்டுகிறது.
இந்த சூழலில் நந்தினியின் அசுர வளர்ச்சியை கண்ட பிறகாவது ஆவின் நிர்வாகமும், பால்வளத்துறையும், தமிழ்நாடு அரசும் உடனடியாக விழித்துக் கொண்டு, தங்களின் கடந்த கால தவறுகளை திருத்திக் கொண்டு, அதிலிருந்து பாடம் கற்று ஆக்கபூர்வமாக செயல்பட்டு ஆவினுக்கான பால் கொள்முதலையும், பால் மற்றும் பால் சார்ந்த உபபொருட்களின் உற்பத்தி, விற்பனையையும் அதிகரிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமானால் அதற்கு அனைத்து வகையிலும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் ஒத்துழைப்பு அளித்து, ஆலோசனைகள் வழங்கிட தயாராக இருக்கிறோம் என்பதையும், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினை பொறுத்தவரை 100% ஆவின் நிர்வாகத்தையோ, தமிழ்நாடு அரசையோ குறை சொல்ல வேண்டும் என்கிற நோக்கம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தியாவின் அடையாளமாக திகழும் கூட்டுறவு பால் நிறுவனங்களான அமுல், நந்தினி வரிசையில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினும் பால் கொள்முதல் மற்றும், பால், பால் சார்ந்த உபபொருட்களின் உற்பத்தி, விற்பனையில் முன்னணி கூட்டுறவு பால் நிறுவனமாக மாறி பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் செயல்பட்டு உலக பால் வணிகச் சந்தையில் போட்டி போடும் அளவிற்கு வளர்ச்சி காண வேண்டும் என்கிற நல்லெண்ண அடிப்படையில் மட்டுமே தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT