Published : 30 Jun 2024 11:03 AM
Last Updated : 30 Jun 2024 11:03 AM
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.14.56கோடியில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.10.92 கோடியில் மூளை ரத்த நாளம் சார் கேத் ஆய்வகம், ரூ.1.2 கோடியில் எம்ஆர்ஐ இணக்கமான மயக்க மருந்து செலுத்தும் உபகரணம் மற்றும் கண்காணிப்பு சாதனங்கள், ரூ.1.25 கோடியில் இதயம் மற்றும் நுரையீரல் கருவி, ரூ.50.85 லட்சத்தில் அதிநவீன அல்ட்ரா சவுண்ட் இயந்திரம், அதி நவீன ரத்தநாள அடைப்பு நீக்கும் மற்றும் உறிஞ்சும் கருவி, அதிநவீன லேசர் கருவி, ரூ.65 லட்சத்தில் போதை மருந்துகண்டறியும் ராண்டக்ஸ் மல்டிஸ்டாட் (தானியங்கி) கருவி, ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் காற்று மாசு அளக்கும் கருவி ஆகியவற்றை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.14.56 கோடியில் அதி நவீன மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதில், ரூ.10.92 கோடியில் மூளை ரத்தநாளம் சார் கேத் ஆய்வகம் மூலம், மூளை ரத்தக் குழாய்களில் உண்டாகும் ரத்த உறைவு மூலம் ஏற்படுகிற திடீர் பக்கவாதத்தை கண்டறியவும், ரத்த குழாய்களில் ஏற்படும் உறைவை அகற்றும் மெக்கானிக்கல் திராம்பெக்டமி எனும் சிகிச்சையை வழங்கிடவும் பயன்படுகிறது.
சிறுவன் மரணம்: சைதாப்பேட்டையில் உயிரிழந்தபிஹார் சிறுவனின் வீட்டை சோதனை செய்தபோது பழைய சாதம் மற்றும் மாசடைந்த குடிநீர் இருந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக சென்னை குடிநீர் வாரிய நிர்வாகம் குடிநீர் மாசடைந்துள்ளதா என்றுஅனைத்து இடங்களிலும் சோதனை செய்து வருகின்றனர். அந்த நீரைபருகியதால் சிறுவனின் இறப்பு ஏற்பட்டதா என்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
நீரின் மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு ஆய்வு கூடத்துக்கு அனுப்பியுள்ளனர். சிறுவன் சிகிச்சை எடுத்த மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் கேட்டுள்ளோம். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டது தமிழகத்தில் திமுக அரசு மட்டும் தான். ஆனால் இன்று நீட் எதிர்ப்பு இந்தியா முழுவதும் உள்ளது. இந்த நிலையை ஏற்படுத்தியது திமுக அரசு தான். நீட் தேர்வில் குளறுபடிகள் நடப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
50% பேர் தேர்வு எழுதவில்லை: நீட் தேர்வு எழுதியிருந்த 1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது. அந்த மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், அதில் 50 சதவீத மாணவர்கள் மறு தேர்வு எழுதுவதற்கு வரவில்லை. நன்றாக படிக்கும் மாணவர்கள் என்றால் மறு தேர்வு எழுதுவதற்கு ஏன் வரவில்லை? இதில் இருந்து அந்த மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு பிரிவுகள் தற்போது பல இடங்களில் முறைகேடு நடந்துள்ளதா என்று கண்டறிய சோதனை நடத்தி வருகின்றனர். இவை அனைத்தும் திமுக அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் சாத்தியமாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT