Published : 30 Jun 2024 09:54 AM
Last Updated : 30 Jun 2024 09:54 AM

கள்ளச் சாராய வழக்கில் அதிகாரிகளையும் சேர்க்க வேண்டும்: அனைத்து கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தல்

சென்னை: கள்ளச்சாராய மரண விவகாரத்தில் அதிகாரிகளை வழக்கில் சேர்க்கவேண்டும் என்று சட்டப்பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று மதுவிலக்கு திருத்த சட்டம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: கடுமையான தண்டனைகள் உள்ளிட்ட திருத்தங்களுடன் கூடிய மதுவிலக்கு சட்ட முன்வடிவை வரவேற்கிறேன். குற்றவாளிகள் விரைவில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வருவதை தடுக்க, அரசு வழக்கறிஞர் ஒப்புதல் இல்லாமல் குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வர முடியாத வகையிலும், குற்றம்சாட்டப்பட்டவர், குற்றமற்றவர் என நீதிமன்றம் கருதும் வரையிலும், ஜாமீனில் வெளியே வரும் நபர் இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டார் என நீதிமன்றம் கருதும் வகையிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்ற முறையில் திருத்தங்களை சேர்த்துக் கொள்ளலாம் என்ற ஆலோசனையை தெரிவிக்கிறேன்.

சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி: நிதியமைச்சர் கூறியுள்ள திருத்தம் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அந்த திருத்தத்தை முன்மொழிகிறேன்.

தி.வேல்முருகன் ( தமிழக வாழ்வுரிமை கட்சி ): எந்த பகுதியில் குற்றம் நடைபெறுகிறதோ,அங்குள்ள அதிகாரிகள், அரசியல் வாதிகள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளையும் பொறுப்பேற்கும் சட்டமாக மாற்ற வேண்டும். அப்போது தான் அனைவருக்கும் பயம் இருக்கும்.

ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி): அதிகாரிகளுக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் விற்பனை செய்ய வாய்ப்பில்லை. அதனால், எப்ஐஆரில் அவர்களை முதல் குற்றவாளிகளாக சேர்க்கப்பட வேண்டும்.

நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உள்ளது. அந்ததுறை கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): ஒரு மாவட்டத்தில் கள்ளச்சாராய மரணங்கள் நடைபெற்றால், அந்தமாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் என அனைவரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட வேண்டும். கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அரசு நிதியில் இருந்து வழங்கக்கூடாது.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: சம்பந்தப்பட்ட அதிகாரிகளை குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. குற்றம் செய்தவர்களை உடனே கைது செய்யலாம். ஆனால், அதிகாரிகளை அப்படி செய்ய முடியாது. சஸ்பெண்ட் செய்து விளக்கம் கேட்டு, பின்னர் தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். வழிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. யாரையும் தப்பிக்க விட வேண்டும் என்று நினைக்கவில்லை.

தி.சதன் திருமலைக்குமார் (மதிமுக): கள்ளக்குறிச்சி சம்பவத்தில் காரணமான அலுவலர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள், பதுக்கி வைப்பவர்களின் அசையா சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். எல்லைக்குட்பட்ட அதிகாரிகளையும் வழக்கில் சேர்த்து அவர்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

ஜி.கே.மணி (பாமக): கள்ளச்சாராயத்தை, விஷச்சாராயத்தை ஒழிக்க கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டம் நல்ல சட்டம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த சட்டத்திருத்தத்தில் டாஸ்மாக், சாராயம் உட்பட அனைத்து சாராயத்தையும் ஒழிக்கும் வகையில் பூரண மதுவிலக்கு வேண்டும்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: 'கிக்' வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயம் குடிக்கின்றனர். அதற்காக தனது உயிரையே பணயம் வைக்கிறார்கள். அந்த 'கிக்' டாஸ்மாக் மதுவில் இல்லை. தெருவுக்கு தெரு போலீஸை போட முடியாது. மனிதனாய் பார்த்து திருந்த வேண்டும். நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும்.

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): இந்த சட்டத் திருத்தத்தை வரவேற்கிறோம்.

எஸ்.எஸ்.பாலாஜி (விசிக): அலுவலர்கள், அதிகாரிகளை பொறுப்பாக்கும் வகையில் சட்ட திருத்தம் இருக்க வேண்டும்.

வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வரும் ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளார். எங்களுக்கும் பூரண மதுவிலக்கில் விருப்பம் உள்ளது. ஆனால், அதில் பல பிரச்சினைகள் உள்ளன. சரியான முடிவை முதல்வர் எடுப்பார். உறுப்பினர்களின் கருத்துகள், குழுவின் பரிந்துரைகள்படி சட்டம் கடுமையாக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x