Published : 30 Jun 2024 09:54 AM
Last Updated : 30 Jun 2024 09:54 AM

தமிழகத்தில் மின் கொள்முதல் இணையதள பயன்பாடு குறைவு: சிஏஜி அறிக்கை குற்றச்சாட்டு

சென்னை: தமிழக அரசின் முறையான கண்காணிப்பு இல்லாததால் மின் கொள்முதல் இணையதளம் குறைவாகவே பயன்படுத்தப்பட்டதாக மத்திய தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைதலைவரின் அறிக்கையில் (சிஏஜி) கூறப்பட்டுள்ளதாவது: மாநிலத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் மின் கொள்முதல் இணைய தளத்தின் மூலம் மட்டுமே பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்வதை கட்டாயமாக்க தமிழக அரசு தவறிவிட்டது. திட்டம் அமலுக்கு வந்து 15 ஆண்டுகளான போதும் இந்த மென் பொருளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் பொறுப்புமையம் இல்லை.

இதன் விளைவாக மின் கொள்முதல் இணையதளம் குறைவாகவே பயன்படுத்தப்பட்டது. இது டெண்டர் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையை பாதித்தது. எனவே, அனைத்து கொள்முதல் நடவடிக்கைகளுக்கும் மின் கொள்முதல் வலை தளத்தை பயன்படுத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இது தவிர தமிழ்நாடு ஒப்பந்த புள்ளிகள் வெளிப்படைத் தன்மையுடன் கோருதல் சட்டத்தின் விதிமுறைகளில் காலவரம்பு குறித்த விவரங்களை இணைக்கும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்படவில்லை.

மென்பொருளில் உள் நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு எவ்வித வசதியும் இல்லை. பல்வேறு ஒப்பந்ததாரர்கள் ஒரே விலையில் டெண்டர் கோரினால் அதை கையாள்வதற்கான வசதிகள் வலைதளத்தில் இல்லை. எனவே, பொதுமக்கள் இணையதளத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களை எளிதில் அணுகுவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்.

பொறுப்பு மையம் தேவை: அதேபோல், டெண்டருக்கான ஆவணங்களை சமர்ப்பிக்கவும், குறிப்பிட்ட காலத்துக்குள் விடுபட்ட சான்றுகளை கோரவும் மின் கொள்முதல் வலை தளத்தில் உள்ள வசதிகள் முறையாக பயன்படுத்தப்படவில்லை. இதை சரி செய்து வலை தளத்தில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே டெண்டர்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.

மின் கொள்முதல் வலை தளத்தில் உள்ள சிக்கல்களை களைவதற்கு ஒரு பொறுப்பு மையத்தை உருவாக்க வேண்டும். மேலும், கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் தங்கள் அலுவலக கணினியில் டெண்டரை சமர்ப்பிக்க ஒப்பந்ததார்களை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x