Published : 30 Jun 2024 06:23 AM
Last Updated : 30 Jun 2024 06:23 AM
சென்னை: தமிழகத்தில் கள்ளச் சாராய மரணம் ஏற்பட்டால், கள்ளச் சாராயம் தயாரித்து விற்பவருக்கு ஆயுள்காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.தமிழகத்தில் தற்போது 1937-ம் ஆண்டு மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச் சாராயம் தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக, தமிழ்நாடு மது விலக்கு சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி சட்டப்பேரவையில் நேற்று சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் சு.முத்துசாமி தாக்கல் செய்தார். மசோதாவில் கூறியிருப்பதாவது
தற்போதுள்ள 1937-ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின்படி விதிகளை மீறி மது இறக்குமதி செய்துவது, ஏற்றுமதி செய்வது, அருந்துதல் ஆகிய குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுகிறது.
இதேபோல், மனித உயிருக்கு கேடு விளைவிக்கக் கூடிய கள்ளச் சாராயத்தை தயாரித்தல், உடைமையில் வைத்திருத்தல், விற்பனை செய்வதுபோன்று வழக்கமாக ஈடுபடும் குற்றங்களுக்கு வழங்கப்படக் கூடிய தண்டனைகள் போதுமானதாக இல்லை என்று கருதப்படுவதால் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து கள்ளச் சாராயத்தின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பது அவசியம் என்றும் அரசு கருதுகிறது. கள்ளச் சாராயத்துடன் கலக்கக் கூடிய எரிசாராயம், மெத்தனால் போன்ற தடைசெய்யப்பட்ட மதுபானங்களால் விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுவதால் கள்ள சாராய விற்பனையை தடுக்க தண்டனை அதிகரிப்பது அவசியமாகிறது. இதற்காக கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தில் சிறை தண்டனையின் கால அளவு, தண்டனைத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும்: கள்ளச் சாராயத்தை தயாரிக்கவும், கொண்டு செல்வற்கும், வைத்திருப்பதற்கும், நுகர்வுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கள்ளச் சாராயம் அருந்தி மரணம் ஏற்பட்டால், கள்ளச் சாராயம் தயாரித்து விற்றவருக்கு ஆயுள்காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.
இதேபோல குற்றங்களில் பயன்படுத்தும் அனைத்து அசையும் சொத்துகளையும் பறிமுதல் செய்வதோடு மது அருந்த பயன்படுத்தப்படும் உரிமம் இல்லாத இடங்களை மூடி சீலிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, இந்த குற்றங்களை செய்யக்கூடிய நபர் எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்களை செய்வதிலிருந்து தடுப்பதற்கு கணிசமான தொகைக்கு உத்தரவாதத் தொகையுடன் கூடிய பிணை பத்திரத்தை நிறைவேற்றுவதற்கும் நிர்வாகத் துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற குற்றங்களை செய்து தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவரை அந்தப் பகுதியில் இருந்தே அகற்றுவதற்காக மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரியால் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய் வதற்கும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், கள்ளச் சாராயத்தை ஒழிக்கும் வகையில் இதில் ஈடுபடக்கூடிய வர்கள், பயன்படுத்தக்கூடிய பொருட்கள், இடம் என அனைத்தையும் வரைமுறைப்படுத்தி அதற்கான தண்டனைகளையும், அபராத தொகைகளை அதிகரிக்கவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குவதற்கான வழிவகையும் ஏற்படுத்தி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த சட்டத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் நேற்று உறுப்பினர்களின் விவாதத்துக்குப்பின் பேரவை யில் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட எஸ்.பி., காவல் நிலைய அதிகாரியே பொறுப்பு: முதல்வர் எச்சரிக்கை - சட்டப்பேரவையில், காவல், தீயணைப்புத் துறை தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசியதாவது:
கள்ளக்குறிச்சி சம்பவத்துக்குப்பின் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை எஸ்.பி.க்கள் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய நான், இதுதொடர்பாக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளேன். இனிமேல் எங்காவது கள்ளச் சாராய உயிர் பலி நடக்குமானால், அதற்கு அந்த மாவட்ட காவல்துறை அதிகாரியும், எல்லைக்கு உட்பட்ட காவல் நிலைய அதிகாரியும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை மிகவும் கண்டிப்புடன் சொல்லியிருக்கிறேன்.
அதைப்போலவே, போதைப் பொருள் நடமாட்டம் மற்றும் விற்பனையை முற்றிலுமாகத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இக்குற்றங்களில் கைது செய்யப்படுபவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்கிறோம். கடந்த 2 ஆண்டுகளாக, குற்றவாளிகளின் ரூ.18.05 கோடி மதிப்பிலான 46 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
கள்ளச் சாராயத்தைப் போலவே போதை மருந்து ஒழிப்பிலும் காவல் துறை அதிகாரிகள் உறுதியாக இருக்க வேண்டுமென்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறேன். மது, போதை பழக்கங்களுக்கு எதிராக குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை அரசு ஒரு பக்கம் எடுத்தாலும் இது தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் அதிகம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அரசு கருதுகிறது. போதை மருந்தின் பாதிப்புகளை உணர்த்துதல், குடிநோயாளிகளை மீட்பது ஆகியவற்றை ஒரு இயக்கமாகவே அரசு நடத்தி வருகிறது. அந்த இயக்கத்தை சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...