Published : 30 Jun 2024 10:47 AM
Last Updated : 30 Jun 2024 10:47 AM

கள்ளச் சாராய விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: கள்ளச் சாராயம் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில், காவல், தீயணைப்புத் துறை தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசியதாவது:

நாற்பதுக்கு நாற்பது வெற்றியை பெற்ற பெருமிதத்துடன், பேரவைக்கு வந்துள்ளோம். நடைபெற்றது மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் எதிர்க்கட்சிகள் என்னை குறிவைத்தும், இந்த அரசை விமர்சித்தும்தான் தேர்தல் களத்தில் அதிகம் பேசின. ஆளும் திமுக அரசின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

வரும் இரண்டாண்டு காலமும் ஈடு இணையற்ற திட்டங்களை தீட்டித் தந்து, 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம்.

மக்களவைத் தேர்தல் முடிவுகளை சட்டப்பேரவை தொகுதி வாரியாக ஆய்வு செய்தால், திமுக கூட்டணி 221 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. அதனால்தான், மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள், தினந்தோறும் அவைக்கு வந்து, அவையின் மாண்புக்கு குந்தகம் விளைவித்துச் சென்றுவிட்டனர். இந்த தேர்தல் தோல்வியை மறைக்க அவர்கள் போட்ட சதித்திட்டம்தான், கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து கிளப்பியது.

ஜூன் 19-ம் தேதி கள்ளக்குறிச்சி சம்பவத்தை கேள்விப்பட்டதும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டேன். அதுகுறித்து அவையில் ஜூன் 20-ம் தேதி முழுமையான அறிக்கையை தாக்கல் செய்துள்ளேன். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கான உண்மையான காரணத்தை அறிய ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைத்ததுடன், சிபிசிஐடி விசாரிக்கவும் உத்தரவிட்டேன்.

அமைச்சர்கள், உள்துறை செயலர், டிஜிபி ஆகியோரை உடனடியாக அனுப்பி வைத்தேன். 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம், விஷச்சாராயம் ஒழிப்பு மற்றும் குற்றவாளிகள் கைது நடவடிக்கைகள் தீவிரமாக தொடர்கிறது. இறந்தோர், பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதுடன், பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கைப் பொறுப்பை அரசு ஏற்றுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளை 24 மணிநேரத்தில் எடுத்துள்ளோம். இதன் பிறகும் நடவடிக்கைகள் சரியில்லை என்று சொல்வது, அவர்கள் நடத்தும் திசைதிருப்பல் நாடகமாகும். எதை மறைத்தோம் என்று சிபிஐ விசாரணை கேட்கிறார்கள், ‘சாத்தான்குளம் சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டதற்கே சிபிஐ விசாரணை கேட்டீர்களே’ என எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

மனித உயிர்கள் இறந்து போனால், இரண்டு பேரா, இருபது பேரா என்று பார்ப்பது இல்லை. ஒரே ஒருவர் இறந்தாலும் அதுமாபெரும் இழப்புதான். சாத்தான்குளம் சம்பவத்தை அப்போதைய அதிமுக அரசு மறைக்க நினைத்ததால், சிபிஐ விசாரணை கேட்டோம். ஆனால் இன்று இந்த அரசு எதையும் மறைக்கவில்லை. குறுகிய காலத்துக்குள் கைது செய்து, ஒருவர்கூட தப்ப முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளோம்.

கள்ளச்சாராய விற்பனை என்பது ஒரு சமூகக் குற்றம். விலைமதிப்பில்லாத மனித உயிர்களைப் பலி வாங்குகிற இதை முற்றிலுமாக ஒழிக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.இவ்வாறு பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x