Published : 15 Aug 2014 12:57 PM
Last Updated : 15 Aug 2014 12:57 PM
மாயாண்டிபாரதி - தேச விடுதலைக்குப் பிறகும் நிஜ விடுதலைக்காக தொடர்ந்து போராடிய இந்த தியாகச் செம்மல், இப்போது கட்டிலில் சாய்ந்து கிடக்கிறார். இந்தச் சூழலிலும் தன்னைவிட இந்த தேசத்தைப் பற்றிய கவலைதான் அவரை இன்னும் அழுத்திக் கொண்டிருக்கிறது.
எனக்கு நினைவுகள் நன்றாக இருக்கின்றன. நான் எழுதிய ‘போருக்குத் தயார்’ என்ற நூலை மறுபதிப்பு செய்ய வேண்டும். இன்னும் 3 புத்தகங்களை எழுதி வைத்திருக்கிறேன். அதையும் பதிப்பிக்க வேண்டும். இதற் காகவும் எனது மருத்துவச் செலவுக்கும் நிதி வழங்க வேண்டு கிறேன்.. அண்மையில், தனது நெருங்கிய நட்பு வட்டத்துக்கு இப்படி கடிதம் எழுதி இருக்கிறார் மாயாண்டி பாரதி.
விடுதலைப் போராட்டத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட தோழர் மாயாண்டி பாரதி, சுதந்திரத்துக்குப் பிறகும் உண்மையான சுதந்திரம் இது வல்ல என்று சொல்லி பல்வேறு போராட்டங்களை நடத்தியதால் 1967வரை சிறையில் இருந்தார். சுமார் 13 ஆண்டுகளை சிறையில் கழித்த மாயாண்டி பாரதிக்கு இப்போது வயது 98. மத்திய அரசின் தியாகிகள் பென்ஷனும் மாநில அரசின் முதியோர் உதவித் தொகையும் பத்திரிகையாளர் ஓய்வூதியமும் இவரை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் பெரும் பகுதியை புத்த கங்கள் எழுதுவதற்கே ஒதுக்கி விடுவதால் மருத்துவச் செல வுக்கு தட்டுப்பாடான நிலை. அதனால்தான் வெட்கத்தைவிட்டு நட்புகளிடம் நிதி கேட்டிருக்கிறார் மாயாண்டி பாரதி. ஆனால், இந்த நிலையிலும் அவரது கவலை எல்லாம் தேசத்தைப் பற்றியே இருக்கிறது.
‘‘வெள்ளைக்காரனிடம் இருந்து இந்த தேசத்தை மீட்க 200 வருஷம் போராடினோம். வேல், வீச்சரிவாள் போராட்டம்.. வெடிகுண்டு வீச்சு.. அப்புறம் அகிம்சைப் போராட்டம் இத்தனையும் செய்தும் நமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. 1946-ல் மாணவர்கள், வியாபாரி கள், பெண்கள் அனைவரும் இணைந்து கடைசி அடி கொடுத்தார் கள். வெள்ளையர்கள் அலறித் துடித்தார்கள். அப்புறம்தான் விடுதலை கிடைத்தது.
ஆனால், அது நிஜமான விடுதலை இல்லை. தேசவிடுதலை யின் பலன் சாமானிய மக்களுக்கு கிடைக்க வேண்டும் என நாங்கள் நினைத்தோம். ஆனால், அதை செல்வந்தர்களுக்கான விடுதலையாக மாற்றிவிட்டார்கள். ஐந்தாண்டுத் திட்டங்களால் செல்வந்தர்கள் மேலும் செல்வந் தர்கள் ஆகிறார்கள்; ஏழைகள் மேலும் ஏழையாகிக் கொண்டே போகிறார்கள். இந்த தேசத்துக்கு உண்மையான சுயராஜ்ஜியம் இன்னும் வரவில்லை.
இதற்காகத்தான், சுதந்திரம் கிடைத்தபிறகும் நாங்கள் போராட்டம் நடத்தினோம். எங்கள் மீது சதி வழக்குகளைப் போட்டு சிறையில் தள்ளினார்கள். 1967 வரை சிறையில் இருந்தேன். இந்தக் காலத்து இளைஞர்களுக்கு இதையெல்லாம் எடுத்துச் சொல்லி புரியவைக்க வேண்டும். உண்மையான சுயராஜ்ஜியத்தை அடைவதற்காக நாம் இன்னொரு போரை நடத்தினாலும் தவறில்லை’’ கட்டிலில் படுத்துக் கொண்டே கனல் தெறிக்கப் பேசுகிறார் மாயாண்டி பாரதி.
ஜனசக்தி பத்திரிகையில் ஆசிரியராகவும் தீக்கதிர் பத்திரிகையில் உதவி ஆசிரிய ராகவும் இருந்த மாயாண்டி பாரதி 1991-ல் ஓய்வு பெற்றார். மதுரைக்குள் பொதுவுடமைக் கட்சிக் கூட்டம் எங்கு நடந்தாலும் ஆட்டோ பிடித்துச் சென்று ஆஜராகிவிடும் இவர், 1994-க்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கைகளில் இருந்தும் விலகிவிட்டார். இவரைப் பற்றி நன்கு அறிந்த ஒன்றிரண்டு தோழர்கள் மட்டும் எப்போதாவது வந்து நலம் விசாரித்துவிட்டுப் போகிறார்கள்.
‘ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்’ என்று சுதந்திரப் போர்க் களத்தில் முழங்கிய மாயாண்டி பாரதி, இப்போது அக்காள் பேத்தியின் நிழலில் அண்டி நிற்கிறார். அடுத்தவேளை சாப்பாட்டுக்கு கஷ்டமில்லை. ஆனால், மருத்துவம் உள்ளிட்ட மாதாந்திரச் செலவுகளுக்காக சிரமப்படுகிறார். இந்த தியாகியின் வாட்டத்தைப் போக்க தமிழகம் என்ன செய்யப் போகிறது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT