Published : 29 Jun 2024 10:54 PM
Last Updated : 29 Jun 2024 10:54 PM
சென்னை: மாணவார்களுக்கு தரமான மிதிவண்டிகளை வழங்கி வருவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.
சனிக்கிழமை (ஜூன் 29) அன்று மாணவர்களுக்கு அரசு வழங்கும் மிதிவண்டிகளின் தரம் குறைந்துள்ளதால், இலவசமாக வழங்கப்பட்ட மிதிவண்டிகளை விற்பனை செய்கிறார்கள் என்று தவறான செய்தி வெளிவந்துள்ளது. மாணவ, மாணவியர்களின் நலன் கருதி ஆண்டுதோறும் இலவச மிதிவண்டிகள் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஆண்டுதோறும் தோராயமாக 5 லட்சம் மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றது.
இந்த அரசு பொறுப்பேற்று, கடந்த 3 ஆண்டுகளாக 16,73,374 தரமான மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
மிதிவண்டிகள் ஒப்பந்தப்புள்ளி சட்ட விதிமுறைகளின்படி கொள்முதல் செய்யப்படுகின்றன. மிதிவண்டிகள் தரம் இரண்டு நிலைகளில் உறுதி செய்யப்படுகின்றது.
மிதிவண்டிகளை கிண்டியில் உள்ள சிடிஏஎல் (Chemical Testing Analytical Lab) நிறுவனத்தில் முழுமையாக பரிசோதனை (Destructive Test) செய்யப்பட்டு தர அறிக்கை (Quality Test Report) பெறப்படுகிறது. அதன் பின்னரே நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படுவதற்கு முன்பாக, மிதிவண்டிகளின் தரம் உறுதி செய்யப்படுகிறது.
இச்செய்தி குறித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து கள ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளார். அவ்வறிக்கையின்படி செல்வபுரம், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மிதிவண்டிகள் பயனுள்ளதாக இருப்பதாகவும், நல்ல நிலையில் அதனை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மிதிவண்டி தரம் சார்ந்து எவ்வித புகாரும் பெறப்படவில்லை எனவும் மிதிவண்டிகளை தனியார்களுக்கு விற்பனை செய்ததாக மாணவர்களால் தெரிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாளிதழில் வெளிவந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள கடை ஆய்வு செய்யப்பட்டதில், அங்கிருந்த சில மிதிவண்டிகள் சிறு பழுதுகளை சரி செய்வதற்காக மாணவர்களால் கடையில் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், பழுது நீக்கம் செய்யப்பட்டவுடன் மாணவர்கள் பெற்றுச் செல்வர் என்றும், அவை விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டவை அல்ல என்று தெரிய வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. மாணவ மாணவியருக்கு தரமான மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றது. எனவே பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தியாகும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment