Published : 29 Jun 2024 09:25 PM
Last Updated : 29 Jun 2024 09:25 PM

கள்ளச் சாராய சம்பவம்: திமுக எம்எல்ஏ-க்கள் மன்னிப்புக் கோர ராமதாஸ், அன்புமணி பதில் நோட்டீஸ்

கோப்புப் படம்

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் ஆளுங்கட்சியினரை தொடர்புபடுத்தி பேசியதாக தலா ரூ.1 கோடி நஷ்டஈடு கோரி நோட்டீஸ் அனுப்பிய திமுக எம்எல்ஏ-க்கள் இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சார்பில் பதில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷத்தன்மை கொண்ட கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கள்ளச் சாராய வியாபாரிகளுக்கும், தங்களுக்கும் தொடர்பு இருப்பதாகக்கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளதாகக்கூறி, அவர்களுக்கு திமுக எம்எல்ஏ-க்களான உதயசூரியனும், வசந்தம் கார்த்திகேயனும் தலா ரூ.1 கோடி நஷ்டஈடு கோரி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

இந்த நோட்டீஸுக்கு ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு அனுப்பியுள்ள பதில் நோட்டீஸில், “கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிர்ப்பலி சம்பவங்களுக்குப் பிறகு முதல்வர் எடுத்துள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டு அனுப்பப்பட்டுள்ள வழக்கறிஞர் நோட்டீஸூக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.

இந்தச் சம்பவத்தில் எந்த காழ்ப்புணர்ச்சியுடனும் நாங்கள் கருத்துத் தெரிவிக்கவில்லை. மாவட்ட ஆட்சியரின் தவறான அறிவிப்பு காரணமாக மேலும் பலர் உயிரிழந்துள்ளனர். நடந்த உயிர்ப்பலி சம்பவத்தின் அடிப்படையி்ல் தெரிவித்த கருத்துக்களில் எந்த அவதூறும் இல்லை.

சமூகப் பிரச்சினைகளை பிரதிபலிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் கருத்து தெரிவித்துள்ளோம். தமிழக மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்துக்காக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வரும் தங்களுக்கு எதிராக அனுப்பப்பட்டுள்ள இந்த வழக்கறிஞர் நோட்டீஸை உடனடியாக திரும்பப்பெற்று, நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும். இல்லையெனில் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x