Published : 29 Jun 2024 12:43 PM
Last Updated : 29 Jun 2024 12:43 PM
சென்னை: வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என சட்டப்பேரவை பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் இருந்து இன்று (சனிக்கிழமை) வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பாமக சட்டப்பேரவை தலைவர் ஜி.கே.மணி கூறியதாவது: சட்டப்பேரவையில் இடஒதுக்கீட்டுக்கான பிரச்சினை குறித்து பேசிய நேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு குறித்து பேசிய போது, “பிஹார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு மாநில அரசுக்கு அதிகாரமில்லை’ என்ற உண்மைக்கு மாறான தகவலை முதல்வரும், சட்டத்துறை அமைச்சரும் பேசியிருப்பது உண்மைக்கு மாறான தகவலாகும். இது சட்டப்பேரவை விதியை மீறிய செயலாக கருதி அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தியுள்ளோம்.
பிஹார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது சரிதான் என பாட்னா நீதிமன்றம் கூறியுள்ளது. எனில் எவ்வளவு உண்மைக்கு மாறான தகவலை தமிழக சட்டப்பேரவையில் பேசுகின்றனர் என்று பாருங்கள். பாட்னா நிதிமன்றம 65 சதவீத இடஒதுக்கீடு கொடுத்ததை தான் தள்ளுபடி செய்தது. காரணம், இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் சென்றுவிட்டது என்பதால்தான்.
எனவே, இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர், அமைச்சர்கள் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். இதை அவையின் உரிமையை மீறிய செயலாகவே நாங்கள் கருதுகிறோம். மேலும், அமைச்சர்கள் சிவசங்கர், ரகுபதி பேசும்போது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சாத்தியமில்லை என்ற பொருளில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் முடியும். அதை நடத்தாமல் முடியாது. அதிகாரமில்லை என்று பேசியுள்ளனர்.
2008 புள்ளிவிவர சட்டத்தின் அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அந்த அடிப்படையில் தான் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துகிறோம். அதற்கும் அதிகாரம் இல்லை என அவையில் மறுக்கின்றனர். இதுவும் உண்மைக்கு மாறானது.
சட்டப்பேரவையில் உண்மையைப் பேச வேண்டும். சரியானதைப் பேச வேண்டும். ஆனால் அப்படி பேசாமல், அமைச்சர் சிவசங்கர் ஒரு 3-ம் தர பேச்சாளரைப் போல சந்தையில், முச்சந்தியின் நின்று கொண்டு பேசுவது போல பேசுகிறார். பல மாநாடுகள், போராட்டங்கள் மூலமாக இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து அவதூறாக கொச்சைப்படுத்திப் பேசுகிறார்.
மேலும் 10.5 மேல் இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். குரூப் 1-ல் உள்ள முக்கிய உயர் பதவிகளில் 10.5 க்கு மேல் இடஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதை நிரூபித்தால், நான் இன்றே சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.
அரசியல் பொதுவாழ்வில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். அமைச்சர்கள் அப்படி நிரூபிக்கவில்லை என்றால் பதவி விலகுவார்களா? எனவே வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான புள்ளி விவரத்தை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT