Published : 29 Jun 2024 05:16 AM
Last Updated : 29 Jun 2024 05:16 AM

மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 7 ஆயிரம் பேர் விரைவில் நியமிக்கப்படுவர்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:

மகளிர் இளம்பருவத்தினருக்கு கர்பப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் மாநிலம் முழுவதும் விரைவில் செயல்படுத்தப்படும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, தமிழகத்துக்கு புதிதாக 100 ஆரம்ப சுகாதார நிலையங்கள் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படும்.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் 1 கோடியே 84,280 பேர் பயன்பெற்றுள்ளனர். ‘இன்னுயிர் காப்போம்; நம்மை காக்கும் 48’ எனும் திட்டத்தின் மூலம் இதுவரை விபத்துகளில் இருந்து 2 லட்சத்து 61,500 பேர் மீண்டு உயிர் பெற்றுள்ளனர். அதற்காக இந்த அரசு செலவிட்ட தொகை ரூ.228.62 கோடி ஆகும்.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இதுவரை 1,021மருத்துவர்கள் உட்பட 3,036 பேர்பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2,553 மருத்துவர்கள், 2,750 கிராம சுகாதார செவிலியர்கள், 986 மருந்தாளுநர்கள், 1,066 சுகாதார ஆய்வாளர்கள் 557 இதரபணியாளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரைவில் இந்த துறைக்கு புதிதாகபணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளுக்கு எல்லாம் விரைவில் தீர்வு காணப்படும். கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழக சுகாதாரத்துறை அதிகமான விருதுகளை பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x