Published : 29 Jun 2024 06:28 AM
Last Updated : 29 Jun 2024 06:28 AM
சென்னை: மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறுசிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இந்தாண்டு ரூ.2,100 கோடி கடன் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்தார்.
பேரவையில் நேற்று அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழகத்தை விண்வெளி தொழிலில் முன்னணி மாநிலமாக மேம்படுத்த விண்வெளி தொழில் கொள்கை வெளியிடப்படும். சுழற்பொருளாதார துறைகளில் முதலீடுகளை அதிகரிக்க, தமிழ்நாடு சுழற்பொருளாதார முதலீட்டு ஊக்குவிப்பு கொள்கை வெளியிடப்படும்.
பொம்மைகள், பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகள் விளயைாட்டு பொருட்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் பெருமளவில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஒரு சிறப்பு திட்டம் வெளியிடப்படும். படைப்புத் திறன் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு தொழில் வளர்ச்சி அடையும் வகையில் செயல்திட்ட வரைபடம் வெளியிடப்படும்.
தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு சேவை வழங்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் வழிகாட்டி நிறுவனத்தின் கிளை கோயம்புத்தூரில் தொடங்கப்படும். ஜப்பான் முதலீடுகளை ஈர்க்க டோக்கியோவில் ஊக்குவிப்பு அமைவு (ஜப்பான் டெஸ்க்) உருவாக்கப்படும்.
சுற்றுலாத் துறை முதலீடுகளை அதிகளவில் ஈர்க்க, வழிகாட்டி நிறுவனத்தில் சிறப்பு அமைப்பு உருவாக்கப்படும். சிப்காட் சார்பில் தனியார் பங்களிப்பில் சுற்றுலாத் தலங்களின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 1,500 ஏக்கர் பரப்பிலும், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 1,000 ஏக்கரிலும் அரியலூர் உடையாளர் பாளையத்தில் 175 ஏக்கரிலும் திருச்சி, திருவெறும்பூரில் 150 ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், மன்னார்குடியில் 150 ஏக்கரிலும் காஞ்சிபுரம் பெரும்புதூரில் 750 ஏக்கரிலும் சென்னை வெளிவட்டச்சாலையை ஒட்டி 200 ஏக்கரிலும், பெரம்பலூர் குன்னத்தில் 100 ஏக்கரிலும் தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும்.
கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஐ.டி. துறையில் தலா 500 பேருக்கு வேலையளிக்க, புதிய மினி டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும். மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இந்தாண்டு ரூ.2,100 கோடி கடன் வழங்கப்படும்.
சிப்காட் தொழிற்பூங்காக்களில், தொழிற்சாலைகளின் தயாரிப்பு பொருட்களுக்கான காட்சி மையம் ரூ.5 கோடியில் இருங்காட்டுக் கோட்டை தொழிற்பூங்காவில் உருவாக்கப்படும். தூத்துக்குடி, கும்மிடிப்பூண்டி, மாம்பாக்கம் சிப்காட் பூங்காக்களில் தொழிலாளர்களுக்காக ரூ.6 கோடியில் விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படும். ஆலங்குளம் சிமென்ட் ஆலையில் எம்-சாண்ட் உற்பத்தி ஆலை ரூ.25 கோடியில் அமைக்கப்படும்.
இவ்வாறு 23 அறிவிப்புகளை வெளியிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT