Published : 02 May 2018 09:32 AM
Last Updated : 02 May 2018 09:32 AM
சென்னைக்கு குடிநீர் வழங்க தமிழகத்தின் பிற உள்ளாட்சி அமைப்புகளின் வரியை பயன்படுத்துவ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியம் 1978-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. குடிநீர் வழங்கு தல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் பணியை 15 பகுதி அலுவலகங்கள், வார்டுக்கு ஒன்று வீதம் 200 பணிமனைகள் மூலம் 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள 67 லட்சத்து 27 ஆயிரம் மக்களுக்கு (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) வழங்கி வருகிறது. இதற்காக 5 ஏரிகள், விவசாயக் கிணறுகள், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் குடிநீருக்காக பயன்படுத்தப்படுகின்றன.
சென்னை நகரில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் 914 கிமீ நீள குழாய்கள் 30 ஆண்டு களுக்கும் மேல் பழமையானவை. பழைய குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் பதித்தல், குடிநீர் கொண்டு செல்லும் புதிய பிரதான குழாய்கள் மற்றும் விடுபட்ட தெருக்களுக்கு 310 கிமீ நீளத்துக்கு புதிய குழாய்கள் பதிக்கும் பணி நூற்றுக் கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகருடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைப் பணிகளும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் நடக்கின்றன. தற்போது 8 லட்சத்து 15 ஆயிரத்து 557 கழிவுநீரகற்று இணைப்புகளை 4,250 கிமீ நீளமுள்ள கழிவுநீர் குழாய்களை வாரியம் பராமரிக்கிறது. கடல்நீரைக் குடிநீராக்கும் மூன்றாவது நிலையக் கட்டுமானப் பணிகள் ரூ.1,200 கோடியில் நடைபெறவுள்ளன.
2016-17-ம் ஆண்டுக்கான சென்னைக் குடிநீர் வாரியத்தின் செலவினம் ரூ.1,084 கோடியே 25 லட்சம். வாரியத்தின் மொத்த வருமானம் ரூ.786 கோடியே 4 லட்சம். இதில், வரிகள் மூலம் ரூ.165 கோடியே 38 லட்சமும் கட்டணங்கள் மூலம் ரூ.280 கோடியே 45 லட்சமும் இதர வருவாய் மூலம் ரூ.53 கோடியே 85 லட்சமும் அடங்கும். அரசு தரப்பில் வாரியத்துக்கு ரூ.286 கோடியே 36 லட்சம் மானியமாக வழங்கியுள்ளது.
இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைத் தினமும் 28.53 மில்லியன் லிட்டர் அளவு சுத்தி கரிப்பு செய்து சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு வாரியம் விற்று வந்தது. இப்போது அந்த விற்பனை நின்றுபோனது. இதனால் கோடிக் கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
உயர்த்தப்படாத கட்டணம்
கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து ஆயிரம் லிட்டர் குடிநீரை ரூ.50-க்கு வாங்கி, மக்களுக்கு 4 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. சென்னை மாநகரில் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றல் கட்டணம் சராசரியாக மாதத்துக்கு ரூ.60 வசூலிக்கப்படுகிறது. 20 ஆண்டுகளாக கட்ட ணம் உயர்த்தப்படவில்லை. ஆனால், பெங்களூரில் ரூ.250-ம், மும்பையில் ரூ.350-ம் வசூலிக்கப்படுகிறது. அரசியல் காரணங்களுக்காக குடிநீர் கட்டணம் உயர்த்தப்படுவதில்லை. இதனால் நிதிச் சிக்கலில் வாரியம் சிக்கித் தவிக் கிறது. பிற மாவட்ட மக்கள் செலுத்தும் வரிப்பணமே வாரியத்துக்கு மானியமாக தரப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் சுந்தர்ராஜ் என்பவர் கூறும்போது, “கோடை காலத்தில் சென்னையில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் பிற பகுதிகளில் 5 நாட்கள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குகின்றனர். அதுவும் அங்கு பெரும்பாலான பகுதிகளில் உப்பு தண்ணீரே கிடைக்கிறது.
100 சதவீத மானியம்
சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்க பிற உள்ளாட்சி அமைப்புகளின் வரி வருவாயை குடிநீர் வாரியத்துக்கு 100 சதவீதம் மானியமாக வழங்குகிறது. எனவே நாகர்கோவில், குமரி, நாகை, கடலூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர நகரங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்க வேண்டும். இதற்காக நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர தயார்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT