Published : 28 Jun 2024 10:50 PM
Last Updated : 28 Jun 2024 10:50 PM
சென்னை: மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்ற தமிழ்நாட்டின் தொடர்ச்சியான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதோடு, தேசிய அளவில் இந்தத் தேர்வு முறையை ரத்து செய்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர தனி நுழைவுத் தேர்வு அடிப்படையில் இருக்கக்கூடாது. இந்தத் தேர்வு முறை மாணவர்களுக்குத் தேவையற்ற கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டினுடைய கருத்தாகும்.
அந்த வகையில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கவும், 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பான சட்டமுன்வடிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், இதுநாள் வரையில் அக்கோப்பு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, சமீபத்தில் நடந்த நீட் தேர்வின்போது நடைபெற்ற முறைகேடுகள், நீட் தேர்வுக்கெதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளது. பல மாநிலங்களும் இந்தத் தேர்வு முறையை ரத்து செய்யவேண்டியதன் அவசியம் குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளன.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வு முறையை ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிப்பதற்கான சட்டமுன்வடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதுடன், தேசிய அளவில் நீட் தேர்வு முறையைக் கைவிடும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் உரிய திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் நகலை இந்த கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன். இவ்விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி விரைந்து தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...