Published : 28 Jun 2024 08:59 PM
Last Updated : 28 Jun 2024 08:59 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தை நடத்த போதிய கவுன்சிலர்கள் வரவில்லை என்பதால் தேதி குறிப்பிடாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாத மாநகராட்சியை கலைக்க வேண்டும் என்று அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
திருநெல்வேலி மாநகராட்சியில் பலகோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசர கூட்டம் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்துக்கான அஜெண்டா மாநகராட்சியில் உள்ள 55 கவுன்சிலர்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி கூட்டத்தில் பங்கேற்க மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் மாலை 4.30 மணிக்கு கூட்ட அரங்கிற்கு வந்தார்.
இதுபோல் துணைமேயர் கே.ஆர். ராஜு, பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ், திமுக கவுன்சிலர்கள் கருப்பசாமி கோட்டையப்பன், பிரபாசங்கரி, ஆமீனா பீவி, அதிமுக கவுன்சிலர்கள் சந்திரசேகர், முத்துலட்சுமி, அமுதா, காங்கிரஸ் கவுன்சிலர்கள் அனுராதா, லட்சுமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் முத்துசுப்பிரமணியன் ஆகிய 10 கவுன்சிலர்களும் வந்திருந்தனர்.
திட்டமிட்ட நேரத்தில் கூட்டம் நடத்தப்படாத நிலையில், அரைமணி நேரத்துக்குப்பின் மேயர் பி.எம்.சரவணன் வந்தார். கவுன்சிலர்கள் வந்து கொண்டிருப்பதாகவும், அவர்கள் வந்ததும் கூட்டம் நடைபெறும் என்றும் மேயர் அறிவித்தார். ஆனால் அவர் அறிவித்ததுபோல் எந்த கவுன்சிலர்களும் கூட்ட அரங்குக்கு வரவில்லை.
அதேநேரத்தில் மேயருக்கு எதிராக செயல்படும் கவுன்சிலர்கள் பலர் மாநகராட்சி வளாகத்தில் திரண்டு நின்றனர். அவர்கள்,‘திமுக மற்றும் தோழமை கட்சி மாமன்ற உறுப்பினர்களின் கூட்டு அறிக்கை’ என்ற பெயரில் ஒரு துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தனர்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்: “திருநெல்வேலி மாநகராட்சியில் அனைத்து வார்டு பொதுமக்கள் நலன் கருதி இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத நிலையில், புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளோம். பொதுமக்களின் அத்தியாவசிய அவசர தேவையான மழைநீர் வடிகால், கழிவுநீர், குடிநீர் பகிர்மான குழாய்கள் பதித்தல் மற்றும் பழுது பார்த்தல், பள்ளி கட்டிடங்கள் ஆகிய பணிகளுக்கான ஒப்பந்தங்கள் எடுக்கப்பட்டும், அதற்கான ஒப்புதல் இந்த கூட்டத்தில் இடம்பெறவில்லை.
மேயரின் சுயநலன் கருதி இப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. மேயரிடம் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தும், மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆணையரிடம் வலியுறுத்தியும், மேயர், தீர்மானங்கள் எதையும் சேர்க்கவில்லை. கோப்புகள் பெருமளவில் தேங்கியுள்ளன. மேயரின் ஏதேச்சையான அராஜக போக்கினை கண்டித்து இந்த கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே ஒருசில காரணங்களால் போதுமான கவுன்சிலர்கள் கூட்டத்துக்கு வரவில்லை என்பதால், மாமன்ற கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும், கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மேயர் அறிவித்துவிட்டு கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினார்.
அப்போது பேசிய அதிமுக கவுன்சிலர்கள் “மாநகராட்சியில் மக்கள் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு கூட்டங்களும் நடத்தப்படுவதில்லை. எனவே திருநெல்வேலி மாநகராட்சியை கலைத்துவிடலாம்” என்று தெரிவித்தனர். அவர்களது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர் ஆமீனா பீவி பேசினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்களும் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினர்.
திருநெல்வேலி மாநகராட்சியில் மேயருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே நிலவும் பனிப்போரால் மக்கள் பணிகள் நடைபெறாமல் மாநகராட்சி நிர்வாகம் முடங்கியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT