Published : 28 Jun 2024 08:01 PM
Last Updated : 28 Jun 2024 08:01 PM
திருப்பூர்: தமிழகத்தில் கள்ளுக்கு விதிக்கப்பட்ட 40 ஆண்டு கால தடையை நீக்க வேண்டும் என்று கோரி திருப்பூரில் விவசாயிகள் ‘கள்’ நிரப்பிய பாட்டிலுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கள்ளச் சாராயம் மற்றும் டாஸ்மாக் மூலம் மதுபோதைக்கு அடிமையாகி உயிரிழப்பவர்களை தடுக்கும் வகையில் கேரளம், கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற மாநிலங்களை போல் தமிழகத்திலும் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி கோரி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கள் பாட்டில்களுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (ஜூன் 27) ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஈசன் முருகசாமி தலைமை வகித்து பேசியது: "கள்ளுக்கு மிக மோசமான தடை தமிழகத்துல் மட்டும் தான் உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் கள் இறக்கவும், விற்கவும், பருகவும் தடை கிடையாது. ஆனால் தமிழகத்தில் மட்டும் கடந்த 40 ஆண்டுகளாக பனை, தென்னை விவசாயிகள் மிகக் கடுமையாக பாதிக்கக் கூடிய தடை விதித்துள்ளார்கள். ஆனால் ரசாயனம் கலந்த சாராயத்தை அரசே விற்பனை செய்து தினந்தோறும் அதனை பருகி, பலர் குடிபோதைக்கு அடிமையாகி இறக்கின்றனர்.
உடலுக்கு ஆரோக்கியமான அனைத்து சத்துகள் நிறைந்த கள்ளுக்கு தடை விதித்துள்ளனர். அன்றாடம் உடல் சத்துக்காக மாத்திரைகளை உண்டு வருகிறோம். எனவே தமிழ்நாடு அரசு சத்துக் குறைபாட்டை போக்கும் விதமாக உடல் நலத்துக்கு ஆரோக்கியமான, கள் இறக்க அனுமதிக்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்தில் எல்லா மக்களுக்கும் கொடுத்தால்தான் சத்து பற்றாக்குறை நீங்கும். எனவே, பொது விநியோகத் திட்டத்தில் கள் விற்கப்பட வேண்டும். விவசாயிகள் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த காலத் தவறுகளை திருத்தி உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். இல்லையென்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு அனுமதி வழங்க வலியுறுத்துவோம்” என்று பேசினார். இதில் பெண்கள் உட்பட பலர் பங்கேற்று, கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தினார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT