Published : 28 Jun 2024 07:22 PM
Last Updated : 28 Jun 2024 07:22 PM

3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி சென்னையில் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

மூன்று குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பினர் சென்னை உயர் நீதிமன்றம் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை: புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பினர் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குற்றவியல் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) என்றும், இந்திய குற்றவியல் விசாரணை முறைச்சட்டம் பாரதிய நகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) என்றும், இந்திய சாட்சியச்சட்டம் பாரதிய சாக்க்ஷய அதிநியம் (பிஎஸ்ஏ) என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சட்டப் பிரிவுகளிலும் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அம்ல்படுத்தப்படவுள்ளது.

இண்டியன் பீனல் கோடு (ஐபிசி), கிரிமினல் ப்ரோசிஜர் கோடு, இந்தியன் எவிடன்ஸ் ஆக்ட் என ஆங்கிலத்தில் இருந்த இந்த சட்டங்களின் பெயர்களை சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்திருப்பதைக் கண்டித்தும், இந்த புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம், சமத்துவ வழக்கறிஞர்கள் சட்டம், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை உயர் நீதிமன்ற ஆவின் நுழைவாயில் முன்பாக வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது.

அகில இந்திய பார் கவுன்சில் இணைத் தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் என். மாரப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி என பல்வேறு ஊர்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பங்கேற்று இந்த புதிய சட்டங்களை கருப்புச்சட்டங்கள் என்றும், உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் நாடு தழுவிய நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என பேசினர். பின்னர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் (எம்எச்ஏஏ) மற்றும் உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பிலும் தனியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி. மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர். கிருஷ்ணகுமார், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் லூயிசால் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரான ஜி. மோகனகிருஷ்ணன் கூறுகையில், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய மூன்று குற்றவியல் சட்டங்களும் வாயில் நுழைய முடியாத பெயர்களில் சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் உள்ள குற்றவியல் சட்டங்களின் பெயர்களை வேறு மொழிகளில் பெயர் மாற்றம் செய்வது என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது மட்டுமின்றி கண்டிக்கத்தக்கதும் கூட. இது முதற்கட்டப் போராட்டம் தான். இந்த சட்டங்களை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் அகில இந்திய அளவில் வழக்கறிஞர்களை ஒன்றிணைந்து போராடுவோம்,” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x